துாக்கத்தினால் T20 உலகக் கிண்ண சுப்பர் 8 போட்டியை இழந்த பங்களாதேஷ் வீரர்

164
Taskin

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹ்மட் நடைபெற்று முடிந்திருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியுடனான சுப்பர் 8 போட்டியில் விளையாடாமல் போனமைக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

>>இளையோர் ஒருநாள் தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து<<

அன்டிகுவாவில் இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான சுப்பர் 8 போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாக அமைந்த நிலையில் இப்போட்டிக்கான பங்களாதேஷ் அணியானது இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடனும் ஒரு மேலதிக துடுப்பாட்டவீரருடனும் ஆடியிருந்தது.  

அதாவது குறிப்பிட்ட போட்டியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹ்மட்டிற்கு பதிலாக மேலதிகமான துடுப்பாட்ட வீரர் ஒருவரினை பங்களாதேஷ் தமது வீரர்கள் குழாத்தில் இணைத்திருந்தது.  

பங்களாதேஷ் அணியின் இந்த முடிவு அப்போது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்திய நிலையில் வெளியாகியிருக்கும் சில தகவல்கள் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பநதுவீச்சாளரான தஸ்கின் அஹ்மட் குறிப்பிட்ட போட்டியில் அதீத தூக்கம் காரணமாக ஆட முடியாமல் வெளியாகியிருக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.  

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹோட்டலில் இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக மைதானத்திற்குச் செல்வதற்காக தஸ்கின் அஹ்மட்டுடன் அந்த நாட்டு வீரர்களின் முகாமைத்துவ குழு தொடர்பினை ஏற்படுத்திய போதும் அவர் தூக்கம் காரணமாக பதிலளிக்காத நிலையில், பங்களாதேஷ் அணியின் வீரர்களின் பஸ் வண்டி தஸ்கின் அஹ்மட் இன்றி மைதானத்திற்குள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் தஸ்கின் அஹ்மட் நேரம் தாமதித்து பங்களாதேஷ் அணியுடன் இணைந்ததாக கூறப்படுகின்றது.  

>>சகலதுறையிலும் அசத்திய ஷானக! ; கண்டி அணிக்கு இலகு வெற்றி!<<

அதேநேரம் தஸ்கின் அஹ்மட்டின் நிலைமைகளை அவதானிக்க ஹோட்டலில் பங்களாதேஷ் அணியின் உத்தியோகத்தர் ஒருவர் மைதானத்திற்குச் செல்லாமல் தக்க வைக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் உரிய நேரத்திற்கு அணியுடன் இணைய முடியாமல் போனமைக்கு தஸ்கின் அஹ்மட் சக அணி வீரர்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்கவிடம் வினவிய போதிலும் அவர் அதற்கு பதில் உதுவும் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.  

இந்திய அணியுடனான 2024 T20 உலகக் கிண்ண சுப்பர் 8 போட்டியில் பங்களாதேஷ் 50 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியிருந்ததோடு, அது அவ்வணி T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.   

செய்தி மூலம் – Cricbuzz 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<