பெண்களுக்கான 600 மீற்றரில் புது வரலாறு படைத்த தருஷி

XIX Reunión Internacional Villa de Bilbao meet 2024

188

ஸ்பெய்னில் இன்று நடைபெற்ற 19ஆவது பில்பாஓ ரீயூனியன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் தருஷி கருணாராத்ன, காலிங்க குமாரகே ஆகிய இருவரும் தத்தமது நிகழ்ச்சிகளில் முறையே 2ஆம் இடத்தையும் 3ஆம் இடத்தையும் பெற்றனர். 

பெண்களுக்கான 600 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 24.84 செக்கன்களில் நிறைவு செய்த தருஷி கருணாரத்ன ஆசிய சாதனையுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஜப்பானின் அயானோ ஷோமி 2022இல் நிலைநாட்டிய (ஒரு நிமிடம் 24.84 செக்.) சாதனையையே தருஷி இன்று முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

பொதுவாக 600 மீற்றர் ஓட்டப் போட்டி ஒலிம்பிக்கில் உள்ளடக்கப்படாவிட்டாலும், இது போன்ற சிறப்பு மெய்வல்லுனர் போட்டிகளில் இந்த நிகழ்ச்சி உள்ளடக்கப்படுவது வழக்கம். அதேபோல, அந்த நிகழ்ச்சிக்கு சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தினால் புள்ளிகளும் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

அதுமாத்திரமின்றி, சர்வதேச மெய்வல்லுனர் போட்டி ஒன்றில் 600 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தருஷி கருணாரட்ன பங்குபற்றியது இதுவே முதல் தடவையாகும். அதேபோல, இந்த நிகழ்ச்சியில் இலங்கை வீராங்கனையொருவர் பதிவு செய்த அதிசிறந்த நேரப் பெறுமதியாகவும், சர்வரேச ரீதியில் குறித்த போட்டி நிகழ்ச்சியில் வீராங்கனையொருவரால் பதிவு செய்யப்பட்ட 3ஆவது அதிசிறந்த நேரப் பெறுமதியாகவும் இது இடம்பிடித்தது 

இதனிடையே, தருஷியின் இந்த செயல்திறன் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 59.70 செக்கன்களில் ஓடிமுடித்து பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கைக்கு சமமாகும். மேலும், இது இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறுவதற்கான அடைவுமட்டமாகவும் இது கருதப்படும்.    

இந்த நிலையில், தருஷி பங்குகொண்ட போட்டியில் அவுஸ்திரேலியாவின் பெண்டியர் ஒபோயா (1:24.53) முதலாம் இடத்தையும், பிரேஸிலின் ஃப்ளாவியா மரியா டி லீமா (1:25.34) மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 

இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.91 செக்கன்களில் நிறைவு செய்த காலிங்க குமாரகே 3ஆவது இடத்தைப் பெற்றார். 

குறித்த போட்டியில் பொட்ஸ்வானாவின் பூசாங் கொலின் கெபினட்ஷிப் (45.47 செக்) முதலாம் இடத்தையும் கியூபாவின் யொவாண்டிஸ் லெஸ்கே (45.71 செக்.) இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 

சர்வதேச மெய்வல்லுனர் அரங்கில் இலங்கைக்கு ஒரு பெருமையான தருணத்தை குறிக்கும் வகையில், தருஷி கருணாரத்ன மற்றும் காலிங்க குமாரகே ஆகிய இருவரும் ஸ்பெய்னில் வெளிப்படுத்திய செயல்திறன் அவர்களுக்கு ஒலிம்பிக் தகுதியைப் பெற்றுக் கொள்வதற்கான புள்ளிகளைப் பெற்றுக் கொடுக்கும்.   

>>மேலும் பல மெய்வல்லுனர்செய்திகளைப் படிக்க<<