இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியும், நட்சத்திர வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் தனது 100ஆவது சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்தார்.
இதனை முன்னிட்டு தர்ஜினி சிவலிங்கத்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று தற்பொழுது வலைப்பந்து உலகக் கிண்ணம் இடம்பெறும் லிவர்பூலில் இலங்கை வீராங்கனைகள் தங்கியுள்ள ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது.
தர்ஜினியின் சாதனைப் புள்ளிகளுடன் இலங்கைக்கு இலகு வெற்றி
வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில்…….
இலங்கை அணியின் முகாமையாளர் ட்ரிக்ஸி நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் திலக்கா ஜினதாச உள்ளிட்ட இலங்கை அணி வீராங்கனைகள் கலந்துகொண்டதுடன், கேக் வெட்டி தர்ஜினிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
பிஜி அணிக்கு எதிராக லிவர்பூல் எம்&எஸ். பேங்க் எரினா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் மூலம் தர்ஜினி சிவலிங்கம், தனது 100ஆவது சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய மூன்றாவது இலங்கை வீராங்கனையாக இடம்பிடித்தார்.
இதற்கு முன்னர் காயத்ரி மற்றும் சஷிக்கா ஆகியோர் இலங்கை சார்பாக 100 சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிங்கப்பூருக்கு எதிரான கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் இம்முறை உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் அதிக கோல்களைப் பெற்ற வீராங்கனை எனும் சாதனையை தர்ஜினி சிவலிங்கம் படைத்தார்.
குறித்த போட்டியில் 88-50 எனும் கோல் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இலங்கை அணி பெற்ற 88 புள்ளிகளில் 76 புள்ளிகள் தர்ஜினி சிவலிங்கத்தின் கரங்களால் பூர்த்தி செய்யப்பட்டன. இதற்கமைய, இம்முறை உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் தர்ஜினி சிவலிங்கம் போட்ட கோல்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரொன்றில் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனையாக தர்ஜினி சிவலிங்கம் பதிவானார். இதற்கு முன்னர் இந்த சாதனையை தன்னகத்தே வைத்திருந்த ஜிம்பாப்வேயின் ஜொய்ஸ் டகய்ட்சாய் 125 கோல்களைப் போட்டிருந்தார்.
எனினும், அதன்பிறகு நடைபெற்ற சமோவா அணியுடனான போட்டியில், 58 வாய்ப்புகளில் 52 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்த தர்ஜினி சிவலிங்கம், பிஜி அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் 39 வாய்ப்புகளில் 36 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார்.
உலகின் அதிசிறந்த வீராங்கனை தர்ஜினியின் வாழ்க்கைப் பயணம்
இலங்கையின் வலைப்பந்து நாமத்தை ……
இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் 2009இல் அறிமுகமான தர்ஜினி சிவலிங்கம், அணி நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கடந்த நான்கு வருடங்களாக இலங்கை அணிக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.
எனினும், 2018 முதல் அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்த தர்ஜினி, இலங்கை அணியின் பயிற்சியாளரான திலக்கா ஜினதாசவின் மீள்வருகையின் பிறகு மீண்டும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து கொண்டார்.
இதன்படி, கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடிய அவர், அபாரமான முறையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்கவும் காரணமாக இருந்தார்.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<