T20i கிரிக்கெட்டிற்கு தற்காலிக விடைகொடுக்கும் தமிம் இக்பால்

348
Tamim Iqbal

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு தன்னை T20i போட்டிகளுக்காக இணைத்துக்கொள்ள வேண்டாம் என பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால், அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் அணி அண்மையில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியதுடன், இத்தொடரைன் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து வரலாறு படைத்தது.

முன்னதாக இத்தொடரிலிருந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் காயம் காரணமாக விலகினார். அதேபோல, கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் 6 மாதங்களுக்கு சர்வதேச T20 கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக புதிய அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய தமிம் இக்பால், “எனது T20i எதிர்காலம் குறித்து விவாதங்கள் இடம்பெற்றன. கடந்த சில நாட்களாக, நான் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினேன்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் வரை நான் T20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். எனக்கு வேறு மாதிரியான சிந்தனை இருந்தது. அடுத்த ஆறு மாதங்களுக்கு T20 போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். எனது முழு கவனம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருக்கும்.

அதேபோல, T20i கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எனது சேவை தேவைப்படாது என எண்ணுகிறேன். ஆனால் கடவுள் நினைத்தால், கிரிக்கெட் சபைக்கு நான் தேவைப்பட்டால் விளையாட நான் தயார். அப்போது T20i கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது பற்றி யோசிப்பேன்” என்றார்.

T20i போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தில் உள்ள தமிம் இக்பால், இதுவரை 78 T20i போட்டிகளில் விளையாடி 1,758 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தற்போது நடைபெற்று வருகின்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் மினிஸ்டர் குரூப் டாக்கா அணிக்காக அவர் விளையாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<