பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான தமீம் இக்பாலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்று (24) பங்களாதேஷின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் (DPL) போட்டி ஒன்றில் ஒன்றில் ஆடி வந்த நிலையில் தமீம் இக்பால் மைதானத்தில் நெஞ்சு வலியினை உணர்ந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
>>லக்னோவ் அணியுடன் இணையும் ஷர்துல் தாக்கூர்<<
இந்த நிலையில் தமீம் இக்பாலினை ஹெலிகொப்டர் ஒன்றின் வாயிலாக சிறந்த வசதிகள் கொண்ட வைத்தியசாலை ஒன்றுக்கு அனுமதிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், அவருக்கு இரண்டாவது தடவையாகவும் வலி ஏற்பட அண்மையில் இருந்த வைத்தியசாலை ஒன்றில் தமீம் இக்பால் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். விடயங்கள் இவ்வாறிருக்க, தமீம் இக்பாலிற்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டிருப்பது வைத்தியர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து தீவிர சிகிச்சைகள் தமீம் இக்பாலிற்கு வழங்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைகளின் பின்னர் நினைவிற்குத் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. தமீம் இக்பாலின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹபீபுல் பசார் அவரின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
36 வயது நிரம்பிய தமீம் இக்பால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகள், 243 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 T20I போட்டிகளில் ஆடியிருப்பதோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அரங்கில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<