EPL தொடரில் தமிம் இக்பால் விளையாடுவது உறுதி

Everest Premier League 2021

275

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர், தமிம் இக்பால் நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் (EPL) விளையாடுவதற்கான அனுமதியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

உபாதை காரணமாக எந்தவித போட்டிகளிலும் கடந்த இரண்டு மாதங்களாக தமிம் இக்பால் பங்கேற்கவில்லை என்பதுடன், உபாதையிலிருந்து குணமடைவதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை

இதன்காரணமாக, இவர், அடுத்தமாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ண தொடருக்கான பங்களாதேஷ் குழாத்திலிருந்து விலகியுள்ளார். ஆரம்பத்தில் உலகக்கிண்ணத்துக்கான ஆயத்தமாக  எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும், பின்னர், உலகக்கிண்ணத்திலிருந்து, வெளியேறுவதாக தமிம் இக்பால் அறிவித்திருந்தார்.

தமிம் இக்பால் அணியிலிருந்து வெளியேறிய, குறித்த காலப்பகுதியில் பங்களாதேஷ் அணி ஜிம்பாப்வே, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டி தொடர்களில் வெற்றியை பதிவுசெய்திருந்தது.

தமிம் இக்பால் தொடர்பில் அறிவித்திருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தமிம் இக்பால் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், சிறந்த உடற்தகுதியை அடைந்துள்ளார். எனவே, எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிம் இக்பாலின் உபாதை தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின், உடற்கூறு நிபுனர் டெபஷிஷ் சௌத்ரி, தமிம் இக்பால் துடுப்பெடுத்தாடும் போது, எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை. எனினும், ஓட்டங்களை ஓடிப்பெறுவது மற்றும் களத்தடுப்பில் அவர் எவ்வாறு செயற்படுகின்றார் என்பதை அவதானிக்க வேண்டும். எவ்வாறாயினும், அவரால் எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் விளையாட முடியும் என நம்புகிறோம் என்றார்.

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில், பைரஹவா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக தமிம் இக்பால் இணைக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…