பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், அவ்வணியின் நம்பிக்கைக்குறிய துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால், இன்று (15) ஆரம்பமாகிய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
14ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் மைதானத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மோதலுடன் இன்று (15) ஆரம்பமாகியது.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம்…
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சார்பில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தமிம் இக்பால், சுரங்க லக்மால் வீசிய போட்டியின் இரண்டாவது பந்து ஓவரின் இறுதிப் பந்து தனது இடது கையின் மணிக்கட்டை தாக்கியதனால், மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சோதனையின்படி, அவரது இடது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இது குறித்து கருத்து தெரிவித்த அவ்வணியின் முகாமையாளர் காலித் மஹ்முத், “தமிமின் நிலைமை குறித் மேலும் தகவல்களை அறிய எமது அணி காத்திருக்கின்றது” என்றார்
ஏற்கனவே, விரலில் ஏற்பட்டிருந்த உபாதையினால் இந்த தொடரின் ஆரம்பப் போட்டிகளில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம் நிலவியது. எனினும், இன்றைய போட்டி ஆரம்பிக்கவுள்ள இறுதித் தருவாயிலேயே அவர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டு, அணிக்குள் இணைந்தார்.
எனவே, அவரது இழப்பு பங்களாதேஷ் அணிக்கு அடுத்து இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி, அதேபோன்று அவ்வணி அடுத்த சுற்றுக்கு தெரிவானால் தொடரின் ஏனைய போட்டிகள் என்பவற்றுக்கு பெரிதும் பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<