2022 இல் இலங்கை விளையாட்டில் சாதித்த தமிழ் பேசும் வீரர்கள்

1331

இலங்கை மக்களுக்கு 2022ஆம் ஆண்டானது மிகவும் சிறப்பான ஆண்டாக இல்லாவிட்டாலும் விளையாட்டுத்துறையில் பல புரட்சிகரமான இருந்ததுடன் வீரர்களால் வரலாற்று சாதனைகளை சாதிக்க முடியுமாகவும் இருந்தது.

கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டில் ஆசியாவின் சம்பியன்களாக இலங்கை மகுடம் சூடிய அதேவேளை, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கினர்.

அதேபோல, 2022ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம், அஸ்லாம் சஜா, விஜயகாந்த் வியாஸ்காந்த், சஹீட் ஹில்மி, மொஹமட் அஸான் மற்றும் அருந்தவராசா புவிதரன் உள்ளிட்ட தமிழ் பேசும் வீரர்கள் சாதனை படைத்த ஆண்டாகும். மேலும் 2022ஆம் ஆண்டில் இலங்கை விளையாட்டுத்துறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டனர்.

எனவே, 2022ஆம் ஆண்டில் இலங்கை விளையாட்டுத்துறையில் ஜொலித்த தமிழ் பேசும் வீரர்கள் குறித்த ஒரு சிறப்பு கட்டுரையை இங்கு பார்ப்போம்.

தர்ஜினி சிவலிங்கம் (வலைப்பந்து)

சிங்கபூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி 6 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்து சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டது.

இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக இருந்தவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம்.

இவரது உயரமே இன்று வலைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையில் உலகிலேயே உயர்ந்த பெண் என வியந்து பாராட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. 2009ஆம் ஆண்டும் மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வெல்ல முழுப்பங்காற்றியவர் தர்ஜினி.

>> இலங்கையின் முன்னேற்ற பாதையை ஆரம்பித்த 2022ம் ஆண்டு!

2018 இலும் இலங்கைக்கு வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுத்தரக் காரணமானவர். அத்துடன் இரு ஆண்டுகளிலும் ஆசிய மட்டத்தில் அதிக கோல் போட்டவருக்கான ‘Best Shooter’ விருதையும் வென்றவர். 2011ஆம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் 2019 இங்கிலாந்தில் நடைபெற்ற வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் அதிக கோல் போட்டவருக்கான உலகிலேயே சிறந்த ‘Best Shooter’ விருதினையும் வென்ற பெருமை தர்ஜினிக்கு உண்டு.

எனவே, பல வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு வென்று கொடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்த தர்ஜினி, இலங்கை வலைப்பந்து அணியின் தலைவியாகவும் பணியாற்றியிருந்தார்.

எனவே, இலங்கை வலைப்பந்தாட்டத்தில் மாத்திரம் இல்லாமல் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்துவரும் தர்ஜினிக்கு தற்போது 43 வயதானாலும் அவரது சேவையை தொடர்ந்து இலங்கை அணிக்கு வழங்கி வருகின்றார் என்பது பாராட்டுக்குரியது.

இதேவேளை, கடந்த ஆண்டு மாலைத்தீவுகளில் நடைபெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மதிப்புமிக்க ‘Sports Icon’ விருதினை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜயசூரியவுடன், தர்ஜினி சிவலிங்கம் வென்றிருந்தார். தர்ஜினியின் வெற்றிப் பயணத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரங்களில் ஒன்றுதான் இந்த விருது.

அருந்தவராசா புவிதரன் (கோலூன்றிப் பாய்தல்)

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டை பொறுத்தமட்டில் தேசிய மட்டப் போட்டிகளில் வடக்கைச் சேர்ந்த வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக, கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல், தட்டெறிதல் உள்ளிட்ட மைதான நிகழ்ச்சிகளில் வடக்கைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிகளை மட்டுமன்றி சாதனைகளையும் குவித்து வருகின்றார்கள்.

அந்த வகையில், கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான அருந்தவராசா புவிதரன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கடைசி மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.15 மீட்டர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனை படைத்தார்.

>> LPL 2022 தொடரை ஆக்கரமித்த பந்துவீச்சாளர்கள்

கடந்த 2021 ஆண்டு ஒக்டோபர் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.00 மீட்டர் உயரத்தைத் தாவி முதல் தடவையாக, தேசிய கோலூன்றிப் பாய்தல் சம்பியனான இஷார சந்தருவனை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 5.10 மீட்டர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஒரு சென்றி மீட்டரினால் புவிதரன் துரதிஷ்டவசமாக தவறவிட்டார். குறித்த போட்டியிலும் அவர் இஷார சந்தருவனை வீழ்த்தியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் 5.00 மீட்டர் உயரத்தைத் தாவி இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

எனவே, கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 3 தடவைகள் அடுத்தடுத்து தவறவிட்ட புவிதரன், தனது விடாமுயற்சியின் பிரதிபலனாக 4ஆவது முயற்சியில் கோலூன்றிப் பாய்தலுக்கான இலங்கை சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

பாடசாலைக் கல்வியை நிறைவு செய்ததன் பிறகு தற்போது இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தில் இணைந்துள்ள புவிதரன், அவருடைய ஆரம்பகால பயிற்சியாளரும், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பயிற்சியாளருமான கணாதீபனிடம் தொடர்ந்து பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் (கிரிக்கெட்)

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தமிழ் வீரர் ஒருவர் இடம்பெற மாட்டாரா? என்ற கேள்விக்கான பதிலை 2022இல் நிரூபித்துக் காட்டி வீரர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்;த்.

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் மூன்றாவது அத்தியாயம் வெற்றிகரமாக 2021 டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி, தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வியாஸ்காந்த், அந்த அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 6.68 என்ற பந்துவீச்சு சராசரியுடன், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார். அத்துடன் தொடரில் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.

எனவே, LPL தொடரில் வெளிப்படுத்திய திறமை காரணமாக வியாஸ்காந்த் 2023 ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான ‘Chattogram Challengers’ உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜப்னா கிங்ஸ் அணியில் விளையாடி அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட வியாஸ்காந்திற்கு வெளிநாட்டு தொடர் ஒன்றில் விளையாட கிடைக்கும் முதல் வாய்ப்பு இதுவாகும்.

ஜப்னா கிங்ஸ் அணிக்காக முதலிரெண்டு பருவங்களிலும் விளையாடிய வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு கண்டி பல்கொன்ஸ் அணியுடன் இணைந்தார். இதனால் வனிந்து இல்லாமல் ஜப்னா கிங்ஸ் அணியால் இம்முறை சம்பியன் பட்டம் வெல்ல முடியுமா? அல்லது விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமா? என்ற கேள்விக்கு யாழ் மண்ணின் மைந்தன் வியாஸ்காந்த் சிறப்பாக விளையாடி தான் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளார்.

குறிப்பாக, இறுதியாக நடைபெற்ற 2 LPL தொடர்களிலும் ஒரு சில வாய்ப்புகளே வியாஸ்காந்த்துக்கு கிடைத்தது. ஆனால் இறுதியாக நடைபெற்ற LPL தொடரில் அவருக்கு 100% வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் சரியான முறையில் பயன்படுத்தி சாதித்துள்ளார். அதேபோல, அவரது கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார்.

அஸ்லம் சஜா (கபடி)

இலங்கையில் கபடி விளையாட்டு பெரிதளவில் பிரபல்யமடையாவிட்டாலும், ஆண்டுதோறும் தேசிய ரீதியிலான கபடி போட்டிகள் மற்றும் சர்வதேச மட்ட கபடி போட்டிகள் நடைபெற்று வருவதுடன், இலங்கையைச் சேர்ந்த கபடி வீரர்கள் குறித்த போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் இலங்கையின் தேசிய கபடி அணியைப் பொறுத்தமட்டில் அண்மைக்காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்கள் தேசிய கபடி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருவதை அவதானிக்க முடிகின்றது. இதன்காரணமாக இந்தியாவில் நடைபெறுகின்ற ப்ரோ கபடி லீக், பங்களாதேஷில் நடைபெறுகின்ற பங்கபந்து கபடி லீக் உள்ளிட்ட தொடர்களில் அந்த வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

>> LPL 2022 தொடரில் துடுப்பாட்டத்தில் கலக்கியவர்கள்

இந்த நிலையில், இலங்கை தேசிய கபடி அணிக்காக அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்லம் சஜா, 2022 முற்பகுதியில் பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார்.  குறித்த தொடரில் பங்கேற்றது மாத்திரமன்றி வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை தேசிய கபடி அணியின் உப தலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், அதற்கு முன் நடைபெற்ற தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்ற மதீனா விளையாட்டுக் கழகத்தின் தலைவராக அவர் செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2016 முதல் இலங்கை கபடி அணிக்காக விளையாடி வருகின்ற அஸ்லம் சஜா, சிறந்த Raider இற்கான பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார்.

இதனிடையே, இந்திய பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டிகளை (IPL) ஒத்தவிதத்தில், இந்தியாவில் கபடி விளையாட்டுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ப்ரோ கபடி லீக் தொடரின் ஒன்பதாவது பருவகாலத்திற்கான போட்டிகள் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகியது. இதில் பெங்கால் வோரியர்ஸ் அணிக்காக அஸ்லம் சஜா விளையாடியிருந்தார். இந்திய நாணயப்படி 10 இலட்ச ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 4.5 மில்லியன் ரூபாய்களுக்கு) அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஷஹீட் ஹில்மி (கெரம்)

17 நாடுகளின் பங்குபற்றலுடன் கடந்த ஒக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற 8ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் தொடரில் சுவிஸ் லீக் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் தேசிய கெரம் சம்பியனான ஷஹீட் ஹில்மி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் பங்குகொண்ட இந்தியாவைச் சேர்ந்த பிரபல வீரர்களான சந்தீப் திவ் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகிய இருவரையும் ஷஹீட் ஹில்மி வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் நிஷான்த பெர்னாண்டோவுடன் களமிறங்கிய ஷஹீட் ஹில்மி மற்றுமொரு வெண்கலப் பதக்கதை வென்று அசத்தினார்.

இதேவேளை, ஆண்களுக்கான குழுநிலை இறுதிப் போட்டியில் பிரபல இந்தியாவுடன் மோதிய இலங்கை ஆடவர் கெரம் அணிக்கு வெள்ளிப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது. இந்த அணியிலும் ஷஹீட் ஹில்மி இடம்பிடித்து இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற சஹீட், முதற்தடவையாக கடந்த 2019இல் தேசிய கெரம் சம்பியனாகத் தெரிவானார்.

கொழும்பு றேயால் கல்லூரியின் பழைய மாணவரான ஷஹீட் ஹில்மி, இலங்கையின் நடப்பு தேசிய கெரம் சம்பியனாக வலம் வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மொஹமட் அஸான் (மெய்வல்லுனர்)

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த ஏப்ரலம் மாதம் நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான டெகத்லன் (Decathlon) எனப்படுகின்ற 10 அம்சப் போட்டிகளில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் அஸான் 7,172 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் குறித்த போட்டிப் பிரிவில் 7,000 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது இலங்கை வீரராக சாதனை படைத்து அஸான் வரலாற்றில் இடம்பிடித்தார்.

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் டெகத்லன் போட்டியில் இவ்வாறானதொரு திறமையை வெளிப்படுத்திய முதலாவது மற்றும் ஒரேயொரு வீரராக அஸான் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். அதேபோல, இலங்கையின் டெகத்லன் போட்டிகள் வரலாற்றில் தேசிய சம்பியனாக தெரிவாகிய முதல் தமிழ் பேசுகின்ற வீரரும் இவர் தான்.

இதனிடையே, 2018ஆம் ஆண்டு முதல் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்ற டெகத்லன் போட்டி நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக பங்குகொண்டு வருகின்ற அஸான், தேசிய அளவில் தங்கப் பதக்கமொன்றை வெற்றி கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கிழக்கு மாகாணம் நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அஸான், பாடசாலைக் காலத்தில் நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இறுதியாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டு நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் மாகாண மட்ட சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இவர் பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட பிறகு 2017ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<