இலங்கை மெய்வல்லுனர் சங்க நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்திருந்த கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஜூன் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
ஜூன் 7ஆம் திகதி ஆரம்பமாகிய கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதிலும் குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு குறித்த வீரர்கள் கொழும்புக்கு வந்து பதக்கங்களை வென்றமை பாராட்டத்தக்கது.
இந்த நிலையில், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 15 போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் வடக்கைச் சேர்ந்த நான்கு வீரர்கள் புதிய கனிஷ்ட தேசிய சாதனைகளை நிலைநாட்டியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுனரில் சிறந்த வீரர்களாக ஹிருஷ, தருஷி முடிசூடல்
அதேபோல, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் சார்பில் பங்குகொண்ட 21 தமிழ் பேசுகின்ற வீரர்கள் பதக்கங்களை வென்றெடுத்தனர். இதில் சிறப்பம்சம் என்னவெனில் வடக்கைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் தங்களது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை சுவீகரித்தனர்.
எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் சாதனைகள் மற்றும் பதக்கங்களை வென்ற வீரர்கள் குறித்த ஓர் அலசலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ஹெட்ரிக் தங்கம் வென்ற மிதுன்ராஜ்
மைதான நிகழ்ச்சிகளில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக வலம் வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைப் பிரிதிநிதித்துவப்படுத்தி இம்முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குகொண்ட சசிந்திரகுமார் மிதுன்ராஜ் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் சம்மெட்டி எறிதல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சசிந்திரகுமார் மிதுன்ராஜ், கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதலில் 15.13 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
அதனைத் தொடர்ந்து 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் பங்குகொண்ட அவர், 40.45 மீட்டர் தூரம் எறிந்து புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
அதே பாடசாலையின் முன்னாள் வீரரான எஸ். பிரகாஷ்ராஜினால் கடந்த 2018ஆம் ஆண்டு நிலைநாட்டிய கனிஷ்ட தேசிய சாதனையை (39.73 மீட்டர்) அவர் இவ்வாறு முறியடித்து கனிஷ்ட பிரிவில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.
இதனையடுத்து போட்டியின் கடைசி நாளான 10ஆம் திகதி நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குகொண்ட மிதுன்ராஜ், 45.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் இம்முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்று மிதுன்ராஜ் அரிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.
கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹெட்ரிக் தங்கம் வென்ற மிதுன்ராஜ்
கடந்த சில ஆண்டுகளாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 19 வயதான மிதுன்ராஜ், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சம்மெட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் என நான்கு வகையான மைதான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் மைதான நிகழ்ச்சிக்கான பயிற்சியாளரான ஹரிஹரன் பயிற்சி அளித்து வருகின்றார்.
இலங்கை சாதனையை தறவிட்ட புவிதரன்
23 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் முன்னாள் வீரர் அருந்தவராசா புவிதரன் 5.00 மீட்டர் உயரம் தாவி புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீரித்தார்.
பாடசாலையைக் கல்வியை முடித்த பிறகு தற்போது இலங்கை இராணுவ மெய்வல்லுனர் குழாத்தில் இணைந்து கொண்டுள்ள புவிதரன், விமானப்படை வீரர் இஷார சந்தருவன் 2015ஆம் ஆண்டு நிலைநாட்டிய 4.70 மீட்டர் என்ற கனிஷ்ட தேசிய சாதனையை புவிதரன் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்தார்.
எவ்வாறாயினும், இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு 5.11 மீட்டர் உயரத்தைத் தாவி நிலைநாட்டிய இலங்கை சாதனையை முறியடிக்கும் நோக்குடன் 5.11 மீட்டர் உயரத்தை தாவுவதற்கு புவிதரன் எடுத்த 3 முயற்சிகளும் கைகூடாமல் போயின.
இறுதியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான 2ஆவது தகுதிகாண் போட்டியில் 5.10 மீட்டர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பிடித்த புவிதரன், இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஒரு சென்றி மீட்டரினால் துரதிஷ்டவசமாக தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புவிதரனுக்கு யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பயிற்சியாளர் கணாதீபன் தொடர்ந்து பயிற்சி அளித்துவருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கை சாதனையை மீண்டும் தவறவிட்ட புவிதரன்
டக்சிதாவின் சாதனையை முறியடித்த அபிஷாலினி
கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி 3.15 மீட்டர் உயரம் தாவி புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீரித்தார்.
தேசிய மட்டப் போட்டியில் முதல் தடவையாக பங்குகொண்ட 15 வயதான அபிலாஷினி, அதே பாடசாலையின் முன்னாள் வீராங்கனையான என். டக்சிதாவினால் கடந்த 2019ஆம் ஆண்டு நிலைநாட்டிய தேசிய சாதனையை இவ்வாறு முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே, அவருடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட அதே பாடசாலையின் மதிவாணன் ஷாலினி 2.80 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதுஇவ்வாறிருக்க, 23 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மெய்வல்லுனர் சங்கம் சார்பில் பங்குகொண்ட என். டக்சிதா தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 3.40 மீட்டர் உயரத்தை பதிவு செய்தார்.
ஹெரினாவுக்கு இரண்டு பதக்கங்கள்
யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சந்திரகுமார் ஹெரினா, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தினார்.
23 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.80 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கம் வென்ற அவர், அதன் பிறகு நடைபெற்ற 23 வயதின்கீழ் பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.58 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கம் சுவீகரித்தார்.
எனவே இம்முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பில் 2 பதக்கங்களை வென்ற ஹெரினாவுக்கு சுபாஷ்கரன் பயிற்சி அளித்துவருகின்றார்.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியதன் காரணமாகவும் கொரோனா தொற்றுநோய் காரணமாகவும் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித பயிற்சியும் இன்றி காணப்பட்ட ஹெரினா, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் பங்குபற்றி பதக்கம் வென்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.
எவ்வாறாயினும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பிக்கவுள்ளதால் அங்கு சென்று தொடர்ந்து உயரம் பாய்தலில் மாத்திரம் கவனம் செலுத்தி பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக ஹெரினா தெரிவித்தார்.
கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி அபிலாஷினி புதிய சாதனை
கமல்ராஜுக்கு வெள்ளிப் பதக்கம்
இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 23 வயதின்கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கமல்ராஜ் இரோய் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 7.27 மீட்டர் தூரம் பாய்ந்தார்.
இறுதியாக கடந்த 2019இல் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனரில் 20 வயதின்கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.36 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
அத்துடன், குறித்த தொடரில் ஆண்டின் அதிசிறந்த கனிஷ்ட மெய்வல்லுனராக தெரிவாகிய அவர், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும் அதிசிறந்த மெய்வல்லுனருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.
கமல்ராஜ் இரோய் வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையின் பழைய மாணவர் ஆவார்.
வினோகரனுக்கு முதல் வெற்றி
3000 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டிக்கான பயிற்சிகளை கடந்த மாதம் ஆரம்பித்த மலையக வீரர் தர்மராஜ் வினோகரன், தனது முதல் முயற்சியிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
23 வயதின்கீழ் ஆண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் பங்குகொண்ட அவர், 10 நிமிடங்கள் 24.15 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
இதேவேளை, 23 வயதின்கீழ் ஆண்களுக்கான 1500 மீட்டர் இறுதிப்போட்டியில் பங்குகொண்ட வினோகரன் 7ஆவது இடத்தைப் பிடித்தார். போட்டியை நிறைவுசெய்ய 4 நிமிடங்கள் 25.30 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார்.
அத்துடன், 23 வயதின்கீழ் ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட வினோகரனுக்கு 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
2004 முதல் 2010 வரையான காலப்பகுதியில் 10,000 மீட்டர், 5,000 மீட்டர், மரதன் உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குகொண்டு தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி மலையகத்துக்கு பெருமை சேர்த்த முன்னாள் மெய்வல்லுனரும், பயிற்சியாளருமான அஜந்தனிடம் வினோகரன் பயிற்சிகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
மகாஜனாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்
இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹெரினாவைத் தவிர யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஒருசில வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தினர்.
20 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீராங்கனை விஜயகுமார் ஜதுஸ்டிகா, 3.10 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.
அவருடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட அதே பாடசாலையைச் சேர்ந்த சந்திரகுமார் தீபிகா, அதே உயரத்தைத் தாவி (3.10 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சிவபாதம் சுவர்ணா வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 2.70 மீட்டர் உயரத்தை தாவியிருந்தார்.
அதேபோல, 18 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட சந்திரகுமார் துஷாந்தன் 3.80 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தார்.
இதேவேளை, இலங்கை இராணுவ மெய்வல்லுனர் குழாத்தில் இணைந்து கொண்டுள்ள மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரான சுரேஷ்குமார் கசிகேரதன் 23 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.40 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அருணோதயாவுக்கு 2 பதக்கங்கள்
20 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீரர் இடியமீன் அபிநயன் 4.10 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார். தேசிய மட்டப் போட்டியொன்றில் முதல் முறையாக பங்குகொண்ட அவர் முதல் முயற்சியிலேயே தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதேநேரம், 23 வயதின்கீழ் கோலூன்றிப் பாய்தலில் 4.40 மீட்டர் உயரம் தாவிய அருணோதயா கல்லூரியின் சுக்குமார் திஷாந்த் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, அளவெட்டி அருணோதயா கல்லூரியின் முன்னாள் வீரரான ஹங்கய் ரொஷான், தற்போது அந்தக் கல்லூரியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சோபிதனுக்கு முதல் பதக்கம்
20 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். இந்துக் கல்லூரி வீரர் கதிர்காமலிங்கம் சோபிதன் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் 4.00 மீட்டர் உயரத்தைத் தாவினார்.
சுஜீவனுக்கு வெண்கலப் பதக்கம்
16 வயதின்கீழ் ஆண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.69 செக்கன்களில் நிறைவு செய்த நாவலப்பிட்டிய கதிரேசன் கல்லூரி வீரர் டி. சுஜீவன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அஸீமுக்கு மூன்றாமிடம்
23 வயதின்கீழ் ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் கண்டி மெய்வல்லுனர் சங்கம் சார்பில் பங்குகொண்ட மொஹமட் அஸீம் வெண்கலப் பதக்கம் சுவீகரித்தார். குறித்த போட்டியை 16 நிமிடங்கள் 04.63 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.
தேவமதுமிதனுக்கு வெண்கலப் பதக்கம்
20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் பங்குகொண்ட திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 36.24 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்தார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<