மெய்வல்லுனர் தகுதிகாணில் ஜொலித்த சபான், சண்முகேஸ்வர்ன் மற்றும் துஷாந்தன்

Asian & Asian Junior Championship Trials - 2022

321

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட முதலாவது தகுதிகாண் போட்டிகள் நேற்று (12) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த தகுதிகாண் போட்டியில் அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஒருசில முன்னணி வீரர்கள் மாத்திரம் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இளம் குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் சபான், 21.04 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார்.

முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச்சுற்றில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட மொஹமட் சபானுக்கு இறுதிப்போட்டியில் 5 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச்சுற்றில் 3 ஆவது இடத்தைப் பிடித்த கிழக்கின் நட்சத்திர குறுந்தூர வீரரான மொஹமட் அஷ்ரப்புக்கு துரதிஷ்டவசமாக இறுதிப்போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனிடையே, ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச்சுற்றில் பங்குகொண்ட கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார் (11.08 செக்.) நான்காவது இடத்தையும், ஆண்களுக்கான 400 மீட்டர் தகுதிச்சுற்றில் பங்குகொண்ட மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான மொஹமட் நௌஷாத்துக்கு துரதிஷ்டவசமாக போட்டியை நிறைவுசெய்ய முடியாமல் போனது. இதனால் அவர் குறித்த போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், போட்டிகளின் இறுதி நாளான நேற்று (12) நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 31 நிமிடங்கள் 19.18 செக்கன்களில் நிறைவு செய்தார்.

குறித்த போட்டியில் முதலிடத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தனுஷ்க சந்தருவனும் (31 நிமி. 16.30 செக்.), மூன்றாவது இடத்தை டி சந்தருவனும் (31 நிமி. 53.88 செக்.) பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, சிரேஷ்ட வீரர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட டி. முருகைய்யா, 4.50 மீட்டர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில் முதலிடத்தை தேசிய சம்பியனான இஷார சந்தருவனும் (4.90 மீட்டர்), இரண்டாவது இடத்தை எஸ். ஜனித்தும் (4.80 மீட்டர்) பெற்றுக்கொண்டனர்.

அதேபோல, ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட மொஹமட் நாசிவ், போட்டியை 15.38 செக்கன்களில் நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

அத்துடன், ஆண்களுக்கான 800 மீட்டர் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட மலையக வீரரான
சி. அரவிந்தன் இறுதிப்போட்டியில் 7 ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டு ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட கனிஷ்ட வீரர்களுக்கான தகுதிகாண் போட்டிகளும் குறித்த 3 தினங்களும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

>>Photos – Asian Games First Trials & Juniors Trials – Day 2

இதில் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் தான் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அனுமதி வழங்கியிருந்ததோடு, வட, கிழக்கைச் சேர்ந்த ஒருசில வீரர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

போட்டிகளின் இரண்டாவது நாளான்று கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான கனிஷ்ட பிரிவு கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் சி. துஷாந்தன் இரண்டாவது இடத்தைப் பெற்றார். போட்டியில் அவர் 3.90 மீட்டர் உயரத்தைத் தாவினார்.

குறித்த போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் எம். சில்வா (4.00 மீட்டர்) முதலிடத்தையும், பமுணுகமுவ கொன்சல்வேஸ் கல்லூரியின் என். மல்ஷான் மற்றும் போபிடிய லொயலா கல்லூரியின் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் முறையே 3.70 மீட்டர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கனிஷ்ட பிரிவைப் பொறுத்தமட்டில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த டி. மதுமிதன் (13.00 மீட்டர்) நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<