விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2024ஆம் ஆண்டுக்கான 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 100 மீற்றர் ஓட்ட வீரர் (10.42 செக்.) சமோத் யோதசிங்க தட்டிச் செல்ல, ஆண்டின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 400 மீட்டர் ஓட்ட வீராங்கனை தருஸி கருணாரட்ன (52.69 செக்.) பெற்றுக்கொண்டார்.
தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற மேல் மாகாணம், இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது. 1972 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமானது முதல், மேல் மாகாணம் ஒரு தேசிய விளையாட்டுப் போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் ஒட்டு மொத்த சம்பியன் பட்டத்தை வென்றதை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதில் 106 தங்கம், 82 வெள்ளி மற்றும் 90 வெண்கலப் பதக்கங்களை வென்று மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 45 தங்கம், 47 வெள்ளி, 64 வெண்கலப் பதக்கங்களை வென்ற மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 37 தங்கம், 42 வெள்ளி மற்றும் 47 வெண்கலப் பதக்கங்களை வென்ற தென் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், 9 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற வட மாகாணம் இம்முறையும் கடைசி இடத்தைப் பிடித்தது.
- கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் இலங்கை சாதனை; அசான், வக்ஷானுக்கு தங்கம்
- மெய்வல்லுனர் தகுதிகாணில் பிரகாசித்த வக்ஷான், அரவிந்தன், மிதுன்ராஜ்
- டக்சிதா இலங்கை சாதனை; வக்ஷான், மிதுன்ராஜ், பிரசானுக்கு 2 பதக்கங்கள்
கடந்த ஆண்டு தேசிய விளையாட்டு போட்டிகளில் கிழக்கு மாகாணம் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தமாக 24 பதக்கங்களையும், வட மாகாணம் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 16 பதக்கங்களையும் வென்றமை முக்கிய அம்சமாகும். எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணம் பின்னடைவையும், வட மாகாணம் முன்னேற்றத்தையும் கண்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.
இந்த நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் 9 புதிய போட்டிச் சாதனைனகளும், ஒரு கனிஷ்ட சாதனையும் முறியடிக்கப்பட்டன. இதில் 2 சாதனைகளை வட மாகாணத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர்களான அருந்தவராசா புவிதரன் மற்றும் நேசராசா டக்சிதா முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இந்த ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிக்கான மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளில் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தினர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காண்பித்துள்ளது.
இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் மெய்வல்லுனரின் முதல் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த நேசராசா டக்சிதா 3.51 மீற்றர் உயரம் தாவி தனது சொந்த போட்டிச் சாதனையை புதுப்பித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். முன்னதாக அவர் கடந்த ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 3.50 மீற்றர் உயரம் தாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் 3.30 மீற்றர் உயரம் தாவிய வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீராங்கனையான எஸ். நிரூஷிகா வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, போட்டிகளின் 2ஆவது நாள் நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பில் போட்டியிட்ட அருந்தவராசா புவிதரன் 5.11 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரராக வலம் வருகின்ற புவிதரன், அண்மையில் சுகததாச அரங்கில் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5.17 மீற்றர் உயரத்தை தாவி புவிதரன் இலங்கை சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் வட மாகாணம் மேலும் 2 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.
வட மாகாண வீரர் எஸ். மிதுன்ராஜ், எறிதல் நிகழ்ச்சியில் 2 பதக்கங்களை வென்றெடுத்தார். ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் (45.23 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதல் போட்டியில் (14.72 மீற்றர்) மற்றொரு வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றெடுத்தசசார்.
இறுதியாக கடந்த மாத இறுதியில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 102ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் குறித்த 2 போட்டி நிகழ்ச்சிகளிலும் மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிக்கான மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 தமிழ் பேசும் வீரர்கள் மட்டுமே பதக்கங்களை வென்றனர்.
ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கிழக்கு மாகாண வீரர் எம்.ஐ.எம். அசான் 7.52 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். அதேபோல, ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் பங்குகொண்ட இஸட்.ரி.எம் ஆஷிக், 45.14 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் கடந்த ஆண்டும் இதே போட்டி நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் வென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பில் போட்டியிட்ட ஆர். எம். நிப்ராஸ் ((3:52.80 செக்.) வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதுஇவ்வாறிருக்க, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிக்கான மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளில் மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் சார்பில் போட்டியிட்ட 3 தமிழ் பேசும் வீரர்கள் 4 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்
இதில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியை 14 நிமிடங்கள் 42.04 செக்கன்களில் நிறைவுசெய்த மத்திய மாகாண வீரர் விக்னராஜ் வக்ஷான் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன், ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் (3:52.12 செக்.) அவர் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதன்மூலம் தேசிய விளையாட்டுப் போட்டிக்கான மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளில் 5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் முதல் தடவையாக களமிறங்கிய வக்ஷான், இரட்டை தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
அதுமாத்திரமின்றி, தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற தேசிய நகர்வல ஓட்டத்தில் 2019ஆம்; ஆண்டு தங்கப் பதக்கத்தையும், இந்த ஆண்டு வெள்ளிப் பதக்கத்தையும் வக்ஷான் வெற்றி கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 31:30.35 நிமிடங்களில் நிறைவு செய்த மத்திய மாகாண வீரர் குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். அவர் 17 செக்கன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். முன்னதாக, இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஊவா மாhகாணம் சார்பில் பங்குகொண்ட சி. அரவிந்தன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டி தூரத்தை நிறைவுசெய்ய ஒரு நிமிடமும் 51.99 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.
அதுமாத்திரமின்றி, வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் சபான் ஆண்களுக்கான 200 மீட்டரில் (21.16 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
எனவே, இம்முறை நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளின் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் தமிழ் பேசும் வீரர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<