தமிழ்நாடு இளையோர் கரப்பந்து அணிக்கு இலங்கையில் இலகு வெற்றிகள்

237
Jaffna District Volleyball Association
Image Credit - Jaffna District Volleyball Association

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு இளையோர் கரப்பந்தாட்ட அணியினர் இங்கு விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்ற நிலையில் இந்தியா திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இளையோர் கரப்பந்தாட்டத்தில் நடப்புச் சம்பியன்களாகத் திகழும் தமிழ்நாடு இளையோர் கரப்பந்து அணி கடந்த மார்ச் 31ஆம் திகதி இலங்கைக்கு வந்தது. ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த விதத்தில் இலங்கையின் 5 பகுதிகளில் அவர்கள் வெவ்வேறு அணிகளுடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் முதல் ஆட்டமாக இடம்பெற்ற இலங்கை இளையோர் அணியுடனான போட்டி கம்பஹ ரதாவன கோல்டண் பேர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டியை தமிழ்நாடு வீரர்கள் 3-0 (25-20, 25-18, 25-15) என்ற செட் கணக்கில் இலகுவாக வெற்றி கொண்டனர்.

தொடர்ந்து, ஹொரனை ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மின்சார சபை அணியுடனான போட்டியையும் இந்திய வீரர்கள் 3-0 (25-23, 25-19, 25-20) என்ற செட் கணக்கில் தம்வசப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பயணம் செய்த தமிழ்நாடு இளையோர் அணியினர் அங்கு புத்தூர் வளர்மதி மைதானத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒன்றிணைந்த அணியுடனான போட்டியையும் 3-0 (25-14, 25-18, 25-23) என இலகுவாக வென்றனர்.

அதன் பின்னர் தமிழ்நாட்டு வீரர்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை இராணுவப்படை அணியை எதிர்கொண்டனர். முதல் மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்ட அவர்களுக்கு இந்த போட்டி பெரும் சவாலாக இருந்தது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற முதல் மூன்று செட்களையும் தம்வசப்படுத்திய (25-22, 25-18, 27-25) இலங்கை இராணுவ வீரர்கள் போட்டியில் 3-0 என வெற்றி பெற்றனர்.

இறுதியாக, தம்பதெனிய பொது விளையாட்டு மைதானத்தில் வடமேல் மாகாண ஒன்றிணைந்த அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு இளையோர் அணி 3-0 (25-13, 25-14, 26-24) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இலங்கை சுற்றுப்பயணத்தை நான்கு வெற்றிகளுடன் நிறைவு செய்தது.

தமிழ்நாடு குழாம்

தனிஸ்க் V – கோபிநாத் K – ஜோயல் பெஞ்சமின் – S.சதீஷ் – R.ரகுராம் – K.குரு வசந்த் – வேணு C – M.கபிலன் – மாதவன் T – எட்வின் மரியோன் – ஆடித்யா குணசீலன் – ஆனந்தகுமார் Kகே – VS. முனிஷ் – M.தீபக் குமார்

தலைமை பயிற்சியாளர் – K.சந்திரசேகரன்

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<