தமிழ்நாடு இளையோர் கரப்பந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணம்

952

இந்தியாவின் தமிழ்நாடு இளையோர் கரப்பந்தாட்ட அணியினர் கரப்பந்து சுற்றுத்தொடர் ஒன்றுக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கரப்பந்தாட்ட சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இளையோர் கரப்பந்தாட்டத்தில் நடப்புச் சம்பியன்களாகத் திகழும் தமிழ்நாடு இளையோர் கரப்பந்து அணியின் இந்த விஜயமானது இம்மாதம் (மார்ச்) 31ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரையில் அமையவுள்ளது. குறித்த விஜயத்தின்போது அவ்வணியினர் இலங்கையின் 5 வெவ்வேறு அணிகளுடன் நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த போட்டிகள் நாட்டின் 5 வெவ்வேறு மாவட்டங்களில் இடம்பெற உள்ளன. இதில், இந்திய வீரர்கள் தமது முதல் போட்டியில் கம்பஹா ரதாவன கோல்டண் பேர்ட்ஸ் மைதானத்தில் இலங்கையின் 23 வயதின்கீழ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாடு இளையோர் அணியினர் ஏப்ரல் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், யாழ் மாவட்ட ஒன்றிணைந்த அணியினருடன் போட்டியிடவுள்ளனர். இந்தப் போட்டியானது புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கம்பஹா, களுத்தறை, வவுனியா மற்றும் குருனாகலை ஆகிய இடங்களிலும் இந்திய இளம் வீரர்களுடனான போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  திகதி நேரம் மாவட்டம் மைதானம் மோதும் அணி
01 2023 ஏப்ரல் 1 மாலை 5.00 கம்பஹா ரதாவன கோல்டண் பேர்ட்ஸ் மைதானம் இலங்கை இளையோர் அணி
02 2023 ஏப்ரல் 2 மாலை 5.00 களுத்தறை ஹொரன ஐக்கிய மைதானம் இலங்கை மின்சார சபை அணி
04 2023 ஏப்ரல் 4 மாலை 6.00 யாழ்ப்பாணம் புத்தூர் வளர்மதி மைதானம் யாழ் மாவட்ட ஒன்றிணைந்த அணி
05 2023 ஏப்ரல் 5 மாலை 4.00 வவுனியா வவுனியா நகரசபை மைதானம் இலங்கை இராணுவப்படை அணி
06 2023 ஏப்ரல் 6 மாலை 6.00 குருனாகலை தம்பதெனிய பொது விளையாட்டு மைதானம் வடமேல் மாகாண ஒன்றிணைந்த அணி

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<