அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
அதேபோல, போட்டியின் போது வீரர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை எதுவும் இருக்காது எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
எட்டாவது T20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகியதுடன், முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவலால் கிரிக்கெட் வீரர்களுக்கு தனிமைப்படுத்துதல் உட்பட பல கட்டுப்பாடுகளை ஐசிசி விதித்து இருந்தது. தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை ஐசிசி தளர்த்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தற்போது நடைபெற்று வரும் T20 உலகக் கிண்ணத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வீரர்களையும் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய ஐசிசி நிபந்தனைகளின்படி, அணி மருத்துவர் அனுமதித்தால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வீரர் விளையாட அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடரில் முன்னேற கட்டாய வெற்றிகளை எதிர்பார்த்துள்ள இலங்கை
- எமது பந்துவீச்சாளர்கள் திட்டங்களை சரியாக செயற்படுத்தவில்லை – தசுன்
- நாடு திரும்பும் டில்ஷான்; இலங்கை அணியில் இணையும் பினுர
இது தவிர கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார் என்றும், போட்டியின் போது வீரர்களுக்கு கட்டாய பரிசோதனை எதுவும் இருக்காது எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா மகளிருக்கான கிரிக்கெட்டில் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை தாஹிலா மெக்ராத்துக்கு போட்டியின்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
எனினும், மைதானத்தில் மற்றவர்களுடன் இடைவெளியைக் கடைபிடித்து விளையாட அனுமதிக்கப்பட்டார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் ஐசிசி குறித்த சம்பவம் தொடர்பில் மௌனம் காத்தது.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் இதே நடைமுறையை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடைபிடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<