துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் நிறைந்த T20 கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் 3 பந்துகளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்துவதெல்லாம், அதாவது ஹட்ரிக் சாதனை படைப்பது என்பது அரிதினும் அரிதான சம்பவமாகும்.
அதிலும் 2 விக்கெட்டுகள் எடுத்த பிறகு 3ஆவது விக்கெட்டை பறிகொடுத்து விடக் கூடாது என்பதற்காக புதிதாக களமிறங்கும் துடுப்பாட்ட வீரர் எப்படியாவது அதனை தடுத்த நிறுத்த முயற்சிப்பார். மறுபுறத்தில் பந்துவீச்சாளர் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி ஹட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என முழு மூச்சுடன் பந்துவீசுவார்.
எனவே, கிரிக்கெட்டில் எந்தவகையான போட்டியாக இருந்தாலும் ஹட்ரிக் விக்கெட் எடுத்த பல முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களை நாம் அறிந்து வைத்துள்ளோம். அந்த வரிசையில் 2007 முதல் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தில் ஹட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் குறித்த விசேட தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
பிரெட் லீ (2007)
கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் பிரெட் லீ முதலாவது ஹட்ரிக்கை பதிவு செய்து வரலாறு படைத்தார். அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சகிப் அல் ஹசன், மஷ்ரபி மோர்தாசா மற்றும் அலோக் கபாலி ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஹட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் T20 உலகக் கிண்ண வரலாற்றில் ஹட்ரிக் சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
>> T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாயஜால தருணங்கள்
கார்டிஸ் கேம்பர் (2021)
2007ஆம் ஆண்டிற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் 3 வீரர்கள் ஹட்ரிக் எடுத்து அசத்தினர். முதலில் அயர்லாந்து வீரர் கார்டிஸ் கேம்பர் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஹட்ரிக் சாதனை படைத்தார். அத்துடன் அவர் 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். இதன்மூலம் T20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். s
வனிந்து ஹஸரங்க (2021)
கடந்த 2021ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வனிந்து ஹஸரங்க, தென்னாபிரிக்கா அணியின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து ஹட்ரிக் சாதனைப் படைத்தார். எய்டன் மார்க்கரம், டெம்பா பவுமா மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோரது விக்கெட்களை எடுத்து இவர் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
கங்கிசோ ரபாடா (2021)
2021 T20 உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் கங்கிசோ ரபாடாவும் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இவர் சார்ஜாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் வோக்ஸ், இயென் மோர்கன் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோரது விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து அசத்தினார்.
>> T20 உலகக் கிண்ண விக்கெட் வேட்டையர்கள்
கார்த்திக் மெய்யப்பன் (2022)
அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சுற்று போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த 22 வயது லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார். இவர் இலங்கை அணியின் பணுக ராஜபக்ஷ, சரித் அசலங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் T20 உலகக் கோப்பை தொடரில் ஹட்ரிக் எடுத்த 5வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், T20 உலகக் கிண்ண வரலாற்றில் இவ்வாறானதொரு மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சிறப்பையும் பெற்றுக் கொண்டார்.
2000ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த மெய்யப்பனின் குடும்பம் 2012 இல் நிரந்தரமாக துபாயில் குடியேறியது. தொடர்ந்து கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இடம் பிடித்தார்.
2020ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இடம்பிடித்த அவர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் ஓராண்டு கால பகுதி நேர ஒப்பந்தம் பெற்ற பத்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
இதனையடுத்து 2021 ஒக்டோபர் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தனது சுழல் பந்துவீச்சு திறமையால் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தேர்வாகி தற்போது ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கிரிக்கெட் உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<