T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை தோற்கடிப்போம்: பாபர் அசாம்

ICC T20 World Cup – 2021

334
Getty Image

T20 உலகக் கிண்ணத்தில் இந்த முறை இந்திய அணியை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற பாகிஸ்தான் – இந்திய அணிகள் மோதும் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதாக வரலாறு கிடையாது.

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை 7 தடவைகள் இந்திய அணியுடன் மோதி 7 முறையும் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியுள்ளது.

T20 உலகக் கிண்ணத்தைப் பொறுத்தமட்டில் இதுவரை 5 தடவைகள் மோதி 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதில் ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.

ஆகவே, இந்த முறை நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் சுப்பர் 12 பிரிவில் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள லீக் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

எனவே, உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த மோசமான சாதனையை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பாகிஸ்தான் அணி புறப்பட்டுச் செல்ல முன் லாகூரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் கலந்துகொண்டார்.

இதில் இந்தியாவுடனான போட்டி தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாங்கள் 3-4 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். அதனால் அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை எங்களுக்கு நன்கு பழக்கப்பட்டது.

ஆடுகளங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் எவ்வாறு மாறுபடும், அதற்கு ஏற்றார்போல் துடுப்பாட்ட வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நன்கு தெரியும்

அதுமாத்திரமின்றி, போட்டி நடைபெறுகின்ற நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணி வெல்லும். என்னிடம் கேட்டால், இந்தியாவுடனான போட்டியில் நாங்கள்தான் வெல்வோம். இந்த முறை இந்திய அணியைத் தோற்கடிப்போம்.

உலகக் கிண்ணத் தொடருக்கு முன் பாகிஸ்தான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அழுத்தம் என்ன என்பது தெரியும், போட்டியின் தீவிரம் என்ன என்பதும் புரியும். எங்களின் முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்து முன்னோக்கிச் செல்ல முயல்வோம்.

போட்டிக்கு முன்பாக நாங்கள் குழுவாக இருப்பதால் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகமாகஇருக்கிறது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு வீரரிடமும் இருக்கிறது. கடந்த காலத்தைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.

எதிர்காலத்தில் இந்திய அணியை வீழ்த்தவே தயாராகி வருகிறோம். முழுமையாக தயாராகிறோம் என்று நம்புகிறோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என கூறியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<