T20 உலகக்கிண்ணத்தில் விளையாடும் அணிகள் அனைத்தும் மிக ஆபத்தான அணிகள் என இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான போட்டியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு பேரிழப்பு!
“இங்கிருக்கும் அணிகள் ஆபத்தானவை என்பதை நாம் பார்த்திருக்கின்றோம். எனவே அணிகளுக்கு மரியாதையை வழங்கி போட்டித்தன்மையை கொடுக்க வேண்டும்” என தன்னுடைய ஊடக சந்திப்பில் இவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை அணி சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெறும் என்ற முழு நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும் இவர் சுட்டிக்காட்டினார். “நான் வெளிப்படையாக நேர்மறையான விடயங்களை விரும்புபவன். அதனால் நம்பிக்கையுடன் இருக்கின்றேன். வீரர்களின் திறமை மீது நம்பிக்கை இருக்கின்றது. அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான போட்டியில் வெளிப்படுத்திய ஆட்டம் போன்று தொடர்ந்தும் இருப்பதனை உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.
இலங்கை அணியின் திட்டங்களை பொருத்தவரை ஓட்ட விகிதங்கள் (Run Rate) தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டாலும், போட்டியின் வெற்றியை உறுதிசெய்வது அணியின் முதல் இலக்கு என கருத்து வெளியிட்டுள்ளார்.
“உண்மையில் ஓட்ட விகிதம் உட்பட பல விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம். தொழில்நுட்ப விடயங்களையும் கருத்திற்கொள்கின்றோம். ஆனால் நாங்கள் போட்டியில் வெற்றி பெற்று முதலாவதாக திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம். அது எங்களுக்கு பெரிய உதவியாக அமைந்திருக்கின்றது” என்றார்.
இலங்கை அணியானது தங்களுடைய முதல் சுற்றின் இறுதிப்போட்டியில் வியாழக்கிழமை (20) நெதர்லாந்து அணியை எதிர்கொள்கின்றது. குறிப்பிட்ட இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<