ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நாம் கடந்த போட்டிகளில் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு களமிறங்க எதிர்பார்ப்பதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
T20 உலகக்கிண்ணத்தின் சுபர் 12 சுற்றின் நான்காவது போட்டியில் இலங்கை அணி, செவ்வாய்க்கிழமை (01) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.
கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கும் இலங்கை
கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததன் காரணமாக இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்று கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போட்டிகளில் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளின் தோல்விகளின் அடிப்படையில் இலங்கை அணிக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தநிலையில் இலங்கை அணி தோல்விகளின் பின்னர் எவ்வாறான மனநிலையுடன் உள்ளது என குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். “அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு செல்ல முடியும் என நாம் நம்புகின்றோம். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், நாம் நல்ல மன நிலையுடன் உள்ளோம். தோல்வியடைந்த பின்னர் நல்ல விடயங்களை கலந்துரையாடியதுடன், தவறுகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.
எனவே அடுத்த போட்டிகளில் அணியென்ற ரீதியில் சிறப்பாக விளையாட முடியும் என நினைக்கிறேன். வீரர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளனர். வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒரு தினம் ஒருவருக்கு மோசமான தினமாக அமையும். அவரையும் ஆதரித்து முன்னேற வேண்டும். அணியென்ற ரீதியில் அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயற்படமுடியும் என நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவது அவருடைய துடுப்பாட்டத்தில் எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என குறிப்பிட்ட இவர், விக்கெட் காப்பாளராக செயற்படுவது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவதற்கு உதவியாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நான் ஏற்கனவே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டுள்ளதால், இது பெரிய மாற்றமாக தெரியவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஏற்கனவே செயற்பட்டுள்ளேன். T20 கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் மத்தியவரிசையில் ஆடினேன். பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்டேன். எனவே மீண்டும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டது எனக்கு பாரிய மாற்றமாக தெரியவில்லை.
“அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம்” குசல் மெண்டிஸ் நம்பிக்கை!
என்னுடைய பணியை நான் அறிந்துக்கொண்டதால், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஓட்டங்களை பெற எனக்கு இலகுவாக இருக்கிறது. அத்துடன் விக்கெட் காப்பாளராக இருப்பதால், ஆடுகளத்தை என்னால் சரியாக கணிக்கமுடிகின்றது என நினைக்கிறேன். எனவே விக்கெட் காப்பாளராக செயற்படுவது, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவற்கு உதவுகிறது என நினைக்கிறேன்” என்றார்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளைய தினம் (01) இலங்கை நேரப்படி காலை 09.30 மணிக்கு பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<