கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் குறுகிய மற்றும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்புகின்ற வடிவங்களில் ஒன்றாகவும் உள்ள T20 போட்டிகளுக்கான உலக சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தருணமாக இது உள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இம்முறை T20 உலகக் கிண்ண தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், T20 உலகக் கிண்ணத்தை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு T20 உலகக் கிண்ணத்தை வெல்வதற்காக முழுவீச்சில் தயாராகி வரும் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டச் சென்றது.
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?
இது இவ்வாறிருக்க, பொதுவாக உலகக் கிண்ணத் தொடர்களை இலக்காகக் கொண்டு பெரும்பாலான அணிகள் தமது முன்னாள் வீரர்களை அல்லது வெளிநாட்டு அணிகளின் முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாக அல்லது ஆலோசகர்/களாக நியமித்து அவர்களது அனுபவங்களை இளம் வீரர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும், பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கும்.
அந்த வகையில், இம்முறை T20 உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள இலங்கை அணியில் பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் என எட்டு முன்னாள் இலங்கை வீரர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 8 முன்னாள் வீரர்கள் இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்துள்ளனர். இந்த ஒத்துழைப்பு காரணமாக கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணி துரித முன்னேற்றம் அடைந்துள்ளதை அவதானிக்க முடியும்.
குறிப்பாக, முன்னெப்போதையும் விட அதிகளவான முன்னாள் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்படுவதன் பிரதிபலனாக இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
எனவே, தற்போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து பணிபுரிகின்ற முன்னாள் வீரர்கள் யார் என்பது குறித்த விபரத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
நவீட் நவாஸ் (உதவிப் பயிற்சியாளர்)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட், ஒருநாள் துடுப்பாட்ட வீரரான நவீட் நவாஸ் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார்.
கிரிக்கெட் பயிற்சியாளராக பாரிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் நவீட் நவாஸ் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
அதன்பிறகு பங்களாதேஷ் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவர் பணியாற்றியதுடன் அவரது பயிற்றுவிப்பின் கீழ் கடந்த 2020ஆம் ஆண்டு ஐசிசி இளையோர் உலகக் கிண்ணத்தை முதன் முறையாக பங்களாதேஷ் அணி வென்று சாதனை படைத்தது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் தனது பணியை ஆரம்பித்த நவீட் நவாஸ், இன்று வரை ஒரு உதவிப் பயிற்சியாளராக தனது பங்களிப்பினை இலங்கை அணிக்கு சிறந்த முறையில் வழங்கி வருகின்றார்.
குறிப்பாக, இம்முறை ஆசியக் கிண்ணத்தில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வெல்வதில் அவரது பங்களிப்பும் முக்கிய இடத்தைப் பிடித்தது. இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டுடன் இணைந்து இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியை கட்டியெழுப்பதில் முன்நின்று செயல்பட்டு வருகின்றார்.
இடதுகை துடுப்பாட்ட வீரரான நவீட் நவாஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்காக வெறும் 4 சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்றார்.
T20 உலகக்கிண்ணத்தில் எதிரணிகளை மிரட்டிய இலங்கையின் நட்சத்திரங்கள்!
இலங்கை அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக ஆடியிருக்காத போதிலும், ஒரு பயிற்சியாளராக மிகப் பெரிய அனுபவத்தினை நவீட் நவாஸ் கொண்டிருக்கின்றார். இந்த அனுபவமே அவருக்கு பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணிக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல வழிகாட்டியாக இருக்க உதவியிருக்கின்றது.
எனவே, நவீட் நவாஸின் பயிற்றுவிப்பு மற்றும் ஆலோசனைகள் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மஹேல ஜயவர்தன (பயிற்றுவிப்பு ஆலோசகர்)
இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்த முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவை, அணியின் ஆலோசகராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.
அரவிந்த டி சில்வாவின் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய மஹேல இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதன்படி, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கான ஆலோசகராகவே மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டார்.
இதன்படி, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றின் போது இலங்கை தேசிய அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முற்பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரிலும் இலங்கை அணியின் ஆலோசகராக அவர் கடமையாற்றினார்.
அதேபோன்று, கடந்த T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன சிறிது காலம் பணியாற்றியிருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணம் முழுவதும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மீண்டும் பணியாற்ற அவர் ஒப்புக்கொண்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர் என்பதால், போட்டிக்கு முன்னதாகவே அணியின் திட்டங்களை தயாரிப்பதில் முன்னோடியாக மஹேல ஜயவர்தன திகழ்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றி மற்றும் இதுவரையான சாதனைகளுக்குப் பின்னால் மஹேல ஜயவர்தனவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது.
இதை எமக்கு கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணம் முதல் இறுதியாக நடைபெற்ற ஆசியக் கிண்ணம் வரை எமது வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகள் மூலம் உணரமுடியும்.
T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாயஜால தருணங்கள்
குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியைத் தெரிவு செய்வதிலும் வெற்றிகளுக்குத் தேவையான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பதிலும் சிறப்பான பணியைச் செய்து வருகின்ற மஹேல, இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றவுள்ளார். இதற்காக அவர் கடந்த 6ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்து கொண்டார்.
ஏற்கனவே IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பணிபுரிந்து அந்த அணிக்கு பல சம்பியன் பட்டங்களை வென்று கொடுப்பதில் பிரதான பங்காற்றிய மஹேல ஜயவர்தன, இம்முறை ஆசியக் கிண்ணத்தை வென்று வலுவான வீரர்களை கொண்ட இலங்கை அணிக்கு 2ஆவது தடவையாக T20 உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதற்கான முயற்சியில் கைகோர்த்துள்ளமை இலங்கை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் விடயமாக பார்க்கப்படுகின்றது
லசித் மாலிங்க (வேகப் பந்துவீச்சு ஆலோசகர்)
கிரிக்கெட் உலகின் யோக்கர் ஜாம்பவான் லசித் மாலிங்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் T20 கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பானது இலங்கை ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
எவ்வாறாயினும், தன்னுடைய ஓய்வு தொடர்பில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இனிவரும் காலங்களில் தமது அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மாலிங்க கடமையாற்றினார்.
அதன்பிறகு, இந்த ஆண்டு IPL தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி 2ஆவது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டார்.
எனவே, மிகவும் குறுகிய காலப்பகுதியில் இலங்கை அணியின் பயிற்றுவிப்புக் குழாத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட லசித் மாலிங்கவை இம்முறை T20 உலகக் கிண்ணத்திலும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் செல்ல முன் கண்டியில் இடம்பெற்ற நான்கு நாட்கள் வதிவிட பயிற்சி முகாமில் மாலிங்க இணைந்து கொண்டு தனது அனுபவங்களைப் எமது வேகப் பந்துவீச்சாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
லசித் மாலிங்க இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா பயணமாகாதது மிகப் பெரிய இழப்பாக இருந்த போதிலும், கண்டியில் வைத்து அவரது அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் இலங்கை வீரர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
T20 உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் கலக்கியவர்கள்
சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை எடுத்த உலகின் முதலாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட லசித் மாலிங்கவின் தலைமையில் 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக இலங்கை அணி கைப்பற்றியது போல, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான இலங்கை அணியின் வெற்றிப் பயணத்தில் மாலிங்கவின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.
தர்ஷன கமகே (வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர்)
இந்த ஆண்டு முற்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பயிற்றுவிப்புக் குழாம் அறிவிக்கப்பட்டது. இதன்போது இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டார். எனினும், இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் அந்தப் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கை அணிக்கு நிரந்தர வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டவருமான தர்ஷன கமகேவை இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, கடந்த மே மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக அவர் இணைந்து கொண்டார். குறித்த தொடரில் அசித பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகிய 2 வீரர்களும் வேகப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தமை சுட்டிக்காட்ட வேண்டும்.
கடந்த 2003இல் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட இவர், வெறுமனே 3 ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் தான் இலங்கைக்காக விளையாடியுள்ளார். எனினும், உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடினார். அதன்பின்னர் பயிற்சியாளராக மாறிய தர்ஷன கமகே, இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயல்திறன் மையத்தின் பயிற்றுவிப்புக் குழாத்தில் இணைந்து கொண்டு பணியாற்றினார்.
T20 உலகக்கிண்ணங்களில் கடக்கப்பட்ட கடினமான மைல்கல்!
இதன்படி, இலங்கை வளர்ந்து வரும் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக கடந்த ஏப்ரல் மாதம் தர்ஷன கமகே நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணம் மற்றும் T20 உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றுக்கு இலங்கை வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையினால் கடந்த செப்டம்பர் மாதம் ஒழுங்கு செய்த அழைப்பு T20 தொடரில் SLC REDS அணியின் தலைமைப் பயிற்சியாளராக தர்ஷன கமகே செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் முதல் ஆசியக் கிண்ணம் வரை எமது வேகப் பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய திறமைகளில் தர்ஷன கமகேவுக்கு முக்கிய பங்குண்டு. அதேபோல, இம்முறை T20 உலகக் கிண்ணத்திலும் அவரது பயிற்றுவிப்பு இலங்கை அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
பியல் விஜேதுங்க (சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்)
கடந்த 1993ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடிய பியல் விஜேதுங்க இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றி வருகின்றார்.
2008 முதல் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்ட அவர், மீண்டும் கடந்த ஆண்டு அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ரங்கன ஹேரத், தரிந்து கௌஷால், டில்ருவன் பெரேரா, அகில தனன்ஜய உள்ளிட்ட திறமையான சுழல் பந்துவீச்சாளர்களை உருவாக்கிய மற்றும் வழிநடத்திய பெருமை பியல் விஜேதுங்கவுக்கு உள்ளது. ஆனாலும் அவரது பயிற்றுவிப்பு தொடர்பில் பல விமர்சனங்களும் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதில் கடந்த ஏப்ரல் மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எமது சுழல் பந்துவீச்சாளர்கள் பெரிதளவில் பிரகாசிக்கவில்லை. துணைக் கண்டங்களில் உள்ள ஆடுகளங்களாக காணப்பட்ட போதிலும் ஏன் எமது சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்பிரதிபலனாக இலங்கை டெஸ்ட் அணியில் இருந்து லசித் எம்புல்தெனிய நீக்கப்பட்டார்.
எனினும், சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள பியல் விஜேதுங்க தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் அவரை ஏன் அந்தப் பதவியில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
எவ்வாறாயினும், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளராக வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் செயல்படவுள்ளனர். குறித்த 2 வீரர்களும் அண்மைக்காலமாக IPL உள்ளிட்ட T20 லீக் போட்டிகளில் ஆடி வருவதால் அந்த அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
பிரமோத்ய விக்ரமசிங்க (தெரிவுக் குழுவின் தலைவர்)
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக உள்ள பிரமோத்ய விக்ரமசிங்க மற்றும் அக்குழுவில் அங்கம் வகிக்கும் ரொமேஷ் களுவிதாரண, ஹேமந்த விக்ரமரத்ன ஆகியோரும் இலங்கை கிரிக்கெட்டுக்கு அளப்பரிய சேவையாற்றிய வீரர்கள்.
1996இல் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் அங்கம் வகித்த பிரமோத்ய (40 டெஸ்ட் போட்டிகள் 134 ஒரு நாள் போட்டிகள்), களுவிதாரண (49 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 189 ஒரு நாள் போட்டிகள்) ஆகியோர் தேர்வாளர்களாக பணியாற்றிக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக தமது அனுபவத்தை வழங்கி வருகின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் இலங்கை அணியில் இருந்து அனுபவ வீரர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் தேர்வாளர்கள் மீது முன்வைக்கப்பட்டன. இதில் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தன்னிச்சையாகவும், சுயநலத்துடனும் செயல்படுகின்றார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
எனினும், இலங்கை அணியில் ஏன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்பதற்கான பிரதிபலனை இன்னும் சில மாதங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற விடயத்தை அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். தற்போது அதற்கான பிரதிபலன் கிடைத்துள்ளதை எம்மால் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட் விளையாடுகின்ற நாடுகளில் இந்தியாவைத் தவிர பெரும்பாலான முன்னாள் வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் குழாத்தில் அதிக வாய்ப்பு வழங்கியுள்ள நாடு இலங்கை மாத்திரம் தான். எனவே மேலே குறிப்பிட்ட முன்னாள் வீரர்களின் அனுபவம், ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் சிறப்பாக ஆடி சம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<