T20 உலகக் கிண்ணம் 2010 இன் ‘Run Machine’ மஹேல ஜயவர்தன

ICC T20 World Cup – 2021

386
Getty Image

கிரிக்கெட் உலகில் வலம்வந்த மிகவும் கவர்ச்சிகரமான வீரர் தான் மஹேல ஜயவர்தன. தற்போது அவர் வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராக உலகை தன் பக்கம் ஈர்த்திருக்கின்றார்.

டெஸ்ட் போட்டிகளில் அற்புதமான நுணுக்கங்களைக் கையாண்டு பல உலக சாதனைகளை படைத்த அவர், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் ஒரு நேர்த்தியான வீரராக வலம்வந்தார்.

இதில் குறிப்பாக, T20 போட்டிகளை எடுத்துக்கொண்டால் வேகமாக துடுப்பெடுத்தாடி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்த இலங்கை வீரர்களில் மஹேலவுக்கும் முக்கிய இடம் உண்டு.

மஹேல ஜயவர்வதனவின் T20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் இலங்கையின் மிகவும் வெற்றிகரமாக T20 துடுப்பாட்ட வீரராகவே திகழ்ந்தார்.

இதில் 2014இல் பங்களாதேஷில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியுடன் சர்வதேச T20 கிரிக்கெட் வாழ்க்கைக்கு மஹேல ஜயவர்தன விடைகொடுத்தார்.

எனினும், அவர் T20 அரங்கிலிருந்து ஓய்வுபெற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்தும் இதுவரை சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவே வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

கடந்த 2007 முதல் 2014 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 5 T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய மஹேல, 31 போட்டிகளில் விளையாடி 1016 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன்படி T20 உலகக் கிண்ணப் போட்டிகளில், இன்றுவரை வீரரொருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுதான்.

இதில் 2010 T20 உலகக் கிண்ணத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராகப் பெற்றுக்கொண்ட சாதனை சதம் மற்றும் 6 அரைச் சதங்களும் உள்ளடங்கும்.

எனவே, இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் T20 போட்டிகளில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த மஹேல ஜயவர்தன, 2010 T20 உலகக் கிண்ணத்தில் சதமடித்து சாதனை படைத்ததுடன், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் இடம்பிடித்தார்.

எனவே, 2010 T20 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தன வெளிப்படுத்திய திறமைகள், சாதனைகள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கு பார்ப்போம்.

T20 உலகக் கிண்ணம் 2009; ‘DilsCoop’ மன்னன் டில்ஷானின் பொற்காலம்

ஐசிசி இன் 3ஆவது T20 உலகக் கிண்ணம் 2010ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. 12 நாடுகள் பங்குகொண்ட இந்தத் தொடரின் B குழுவில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றன.

இதில் இலங்கை அணி தமது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை கயானாவில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் மஹேல ஜயவர்தன மாத்திரம் 51 பந்துகளில் 81 ஓட்டங்களை எடுத்து நம்பிக்கை கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதேவேளை, இலங்கை அணி, தமது இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் திசர பெரேரா மற்றும் சுராஜ் ரன்தீவ் ஆகிய இருவரும் T20i அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இந்தப் போட்டியிலும் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி மஹேல ஜயவர்தன மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகிய இருவரும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் 2ஆவது ஓவரின் முதல் பந்தில் 2 ஓட்டங்களுடன் டில்ஷான் ஆட்டமிழக்க, 3ஆவது இலக்கத்தில் களமிறங்கிய அறிமுக வீரர் திசர பெரேரா 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த குமார் சங்கக்கார (3), தினேஷ் சந்திமால் (9) மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் (4) ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி, எதிரணி பந்துவீச்சாளர்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு தனி ஒருவராகப் போராடி ஓட்டங்களைக் குவித்த மஹேல ஜயவர்தன, 64 பந்துகளில் சதமடித்து புதிய சாதனை படைத்தார். இதில் 10 பௌண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

இதனமூலம், தனது முதலாவது T20 சதத்தைப் பெற்றுக்கொண்ட மஹேல, சர்வதேச T20 போட்டி மற்றும் T20 உலகக் கிண்ணத்தில் சதமடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

அதுமாத்திரமின்றி, சர்வதேச T20 போட்டிகளில் சதமடித்த உலகின் நான்காவது வீரராக இடம்பிடித்தார். முன்னதாக கிறிஸ் கெயில், பிரெண்டன் மெக்கலம் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய வீரர்கள் சதமடித்திருந்தனர்.

எவ்வாறாயினும், மஹேலவின் சதத்தின உதவியால் இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணிக்கு ஹமில்டன் மஸகட்சா மற்றும் தடேந்த தாய்பு ஆகிய இருவரும் ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கினர்.

இதில் ஹமில்டன் மஸகட்ச 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

எனினும், போட்டியின் 5ஆவது ஓவர் நிறைவில் மழை குறுக்கிட போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதன்போது ஜிம்பாப்வே அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்களை எடுத்திருந்தது.

எனவே டக்வர்த் லூயிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணிக்கு 5 ஓவர்களில் 43 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது.

எவ்வாறாயினும், மழை தொடர்ச்சியாக பெய்த காரணத்தினால் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறைப்படி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இலங்கை அணி 2 புள்ளிகளைப் பெற்று சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகியது.

இலங்கை அணிக்காக சதமடித்து அசத்திய மஹேல ஜயவர்தன ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதனையடுத்து நடைபெற்ற சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இலங்கை மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மஹேல ஜயவர்தன ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 98 ஓட்டங்கள் மற்றும் குமார் சங்கக்காரவின் அரைச் சதத்தின் உதவியால் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 57 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது 2 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட மஹேல ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சுப்பர் 8 சுற்றில் இலங்கை அணி அடுத்து விளையாடிய அவுஸ்திரேலியா அணியுடனான போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெற்று குறித்த பிரிவில் 4 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக T20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

எனினும், இங்கிலாந்துடனான அரை இறுதிப் போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, 7 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியது.

இதனிடையே, முதல் சுற்றில் துடுப்பாட்டத்தில் கலக்கிய மஹேல ஜயவர்தனவுக்கு இறுதியாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது.

இதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 9 ஓட்டங்களையும், இந்தியாவுடனான போட்டியில் 4 ஓட்டங்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், ஐசிசி இன் 3ஆவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 302 ஓட்டங்களை எடுத்த மஹேல ஜயவர்தன, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்து அசத்தினார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<