கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர T10 போட்டிகள் வழிவகுக்கும்

229

அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட T10 கிரிக்கெட் போட்டிகள் எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுவதற்குரிய சாத்தியப்பாடு ஒன்றினை உருவாக்கும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார தெரிவித்திருக்கின்றார்.

டிம் பெய்னுக்கு அபராதம் விதித்த ஐசிசி

தற்போது கிரிக்கெட் விதிமுறைகளை தீர்மானிக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) தலைவராக செயற்பட்டுவருகின்ற குமார் சங்கக்கார, ஐக்கிய அரபு இராச்சியத்தினுடைய T10 லீக் தொடரில் இந்த முறை டீம் அபுதாபி அணியில் ஆலோசகராக பணிபுரியவிருக்கின்றார். 

குமார் சங்கக்கார தான் ஆலோசகராக பணிபுரியவிருக்கும் அணி தொடர்பில் ஊடகங்களுடன் பேசியிருந்த சந்தர்ப்பம் ஒன்றிலேயே T10 கிரிக்கெட் போட்டிகள் எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுவதற்கான சாத்தியப்பாடு ஒன்றினை உருவாக்கும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

”(முன்னர்) T20 போட்டிகள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளடக்கப்படுவதற்கான பாரிய உந்துதலை ஏற்படுத்தின.” 

”(இன்னும்) கிரிக்கெட் ஒலிம்பிக்கில் வருவதற்காக நிறைய வேலைகளை செய்ய வேண்டி இருக்கின்றன. எல்லா கிரிக்கெட் சபைகளும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதோடு, ஐ.சி.சி. உம் அதற்கான உந்துதலை கொடுக்க வேண்டும். எனவே, இதுவே (T10) அதற்கு பொருத்தமான கிரிக்கெட் வடிவமாக இருக்க முடியும். நீங்கள் (ஒலிம்பிக் போட்டிகள் மூலம்) புதிய இரசிகர் பட்டாளம் ஒன்றினை பெறவிருப்பதால் அந்த இரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு இதுவே (T10 போட்டிகளே) பொருத்தமான கிரிக்கெட் போட்டி வடிவமாக இருக்க முடியும்.”

கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதற்கு வலுச்சேர்க்க T10 போட்டிகள் உதவியாக இருக்கும் என்பது குமார் சங்கக்காரவினுடைய வாதமாக அமைகின்றது.

இதேநேரம், கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் ஐ.சி.சி., கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கில் இணைப்பதன் மூலம் கிடைக்கும் நிதிரீதியான இலாபங்களை குறிப்பிடும் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு தமது அங்கத்துவ நாடுகளிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹேல – சங்காவினால் PCR இயந்திரம் அன்பளிப்பு

இதேநேரம் இங்கிலாந்து அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் வழிநடாத்தும் இயன் மோர்கன், கிறிஸ் கெயில் போன்ற வீரர்களும் T10 போட்டிகள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைவதற்கான ஒரு பாதையினை ஏற்படுத்தும் என்னும் நிலைப்பாட்டிற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், விரைவு வளர்ச்சியினைக் கண்டு வருகின்ற T10 போட்டிகளை கருத்திற்கொண்டு தற்போது T20 லீக் போட்டிகளில் ஆடும் அணிகளும் தமக்கென T10 அணி ஒன்றிணை வைத்திருக்க வேண்டும் என்றும் குமார் சங்கக்கார கூறியிருக்கின்றார்.

“(T10 போட்டிகளுக்கான) சரியான சந்தை ஒன்று உருவாகும் போது ஐ.பி.எல்., பி.பி.எல்.(BBL) ஏன் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவிருக்கும் ஹன்ட்ரட் போன்ற கிரிக்கெட் தொடர்களின் அணிகள் தமக்கான T10 அணியினை அமைப்பதில் கவனம் செலுத்தலாம். நிறைய முதலீட்டாளர்கள், அணி உரிமையாளர்கள் மற்றும் கிரிக்கெட் சபைகள் இந்த T10 கிரிக்கெட் வடிவத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றன.” 

மறுமுனையில் விறுவிறுப்பினை ஏற்படுத்திய T10 லீக் தொடரின் நான்காவது பருவகாலத்துக்கான போட்டிகள் பல முன்னணி வீரர்களின் பங்களிப்போடு எதிர்வரும் 28ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 06ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<