அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் (BBL) தொடரின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்ஸர்ஸ் அணி இரண்டாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த இறுதிப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாகியது. எனினும், நீண்ட நேர இடைவேளையின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு அணிக்கு தலா 12 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.
சங்கக்காரவை உலகின் சமாதானத் தூதராக கௌரவித்த எஸ்.பி பாலசுப்ரமணியம்
இலங்கையில் நடத்தப்பட்டு….
அதன்படி நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற க்ளென் மெக்ஸ்வேல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மார்கஸ் ஹென்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு வழங்கியது.
இதன்படி, களமிறங்கி துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, ஜோஷ் பிலிப்ஸின் அதிரடியான அரைச் சதம் மற்றும் ஜோர்டன் சில்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்புகள் மூலமாக 12 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில், ஜோஷ் பிலிப்ஸ் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஜோர்டன் சில்க் 27 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, க்ளென் மெக்ஸ்வேல் மற்றும் அடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் சற்று கடினமான வெற்றி இலக்கினை நோக்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, 25 ஓட்டங்களுக்கு தங்களுடைய 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இந்த தடுமாற்றத்தின் அழுத்தம் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த, 12 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நிக் லார்கின் 38 ஓட்டங்களையும், நெதன் குல்டர்-நெயில் 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் நெதன் லையோன் மற்றும் ஸ்டீவ் ஓ கீபீ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினர்.
இதன்படி, 2011 ஆம் ஆண்டு முதலாவதாக நடைபெற்ற பிக் பேஷ் லீக்கில் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, இரண்டாவது சம்பியன் கிண்ணத்தை இந்த ஆண்டு கைவசப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு பருவகாலங்களில் இந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த போதும், கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.
அதேநேரம், கடந்த 2015-16 மற்றும் 2018-19 ஆம் ஆண்டு பருவகாலங்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, இந்த முறையும் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்
சிட்னி சிக்ஸர்ஸ் – 116/5 (12) – ஜோஷ் பிலிப்ஸ் 52, ஜோர்டன் சில்க் 27, ஸ்டீவ் ஸ்மித் 21, க்ளென் மெக்ஸ்வேல் 17/2, அடம் ஸம்பா 24/2
மெல்போர்ன் ஸ்டார்ஸ் – 97/5 (12) – நிக் லார்கின் 38, நெதன் குல்டர்-நெயில் 19, நெதன் லையோன் 19/2, ஸ்டீவ் ஓ கீபி 27/2
முடிவு – சிட்னி சிக்ஸர்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி சம்பியனாகியது.
ஆட்ட நாயகன் – ஜோஷ் பிலிப்ஸ்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<