பந்தின் மீது சனிடைசர் தடவிய ஆஸி. வீரர் இடைநீக்கம்

257
Image Courtesy : Getty Image

கவுண்டி கிரிக்கெட் போட்டியின்போது பந்தின் மீது சனிடைசர் (Sanitiser) தடவிய சசெக்ஸ் அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ச் கிளேடன்,  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டியின்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பந்தை பளபளக்கச் செய்வதற்காக எச்சில் பயன்படுத்தக் கூடாது என ஐ.சி.சி இன் புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பந்து பளபளப்பு தன்மையை உடனேயே இழந்து விடுவதால் பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் – மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

ஆஸிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் பட்லர் நீக்கம்

அப்போது சசெக்ஸ் அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலியாவின் மிட்ச் கிளேடன் பந்தில் சனிடைசரை தடவியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணை நடத்தி வரும் நிலையில், சசெக்ஸ் அணி அவரை விசாரணை முடிவடையும் வரை இடைநீக்கம் செய்துள்ளது.

எதுஎவ்வாறாயினும், குறித்த போட்டியில் மிட்ச் கிளேடன் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஹேம்ப் ஷெயார் கழகத்துடன் நடைபெற்ற ஆரம்ப லீக் போட்டியில், முதல்தரப் போட்டிகளில் தனது 300ஆவது விக்கெட் மைல்கல்லை மிட்ச் கிளேடன் எட்டியிருந்தார்.

இதனிடையே, 37 வயதான வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான இவர், தற்போது நடைபெற்று வருகின்ற பொப் வில்ஸ் போட்டித் தொடரில் சர்ரே கழகத்துடன் அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<