மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பதவியில் மீண்டும் மாற்றம்

Indian Premier League 2025

49
Suryakumar

சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. சென்னையில் மார்ச் 23 இல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைவராக செயல்படுவார் என்று ஹர்திக் பாண்டியா அறிவித்திருக்கிறார்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசி அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இதற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு நடப்பு சீசனில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். அவர் இல்லாத சூழலில் இந்திய T20i அணியின் தலைவரான சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ;ஹர்திக் பாண்டியா பேசுகையில், ‘நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கின்றேன். ஏனென்றால் எங்கள் அணியில் மூன்று தலைவர்கள் என்னுடன் விளையாடுகிறார்கள். ரோஹித் சர்மா, சூர்யகுமார், பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் எனக்கு உறுதுணையாக நிற்பார்கள். எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அவர்கள் நிச்சயம் எனக்கு அறிவுரைகளை வழங்குவார்கள். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் தடை காரணமாக நான் விளையாடவில்லை. எனக்குப் பதில் சூர்யகுமார் அணியை வழிநடத்துவார். தடை பெற்றது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த ஆண்டு இந்த தவறு நடைபெற்றது. நாங்கள் இரண்டு நிமிடம் தாமதமாக ஓவர்களை வீசி இருக்கிறோம். அப்போது இவ்வளவு பெரிய தண்டனை எனக்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விதியை அடுத்த ஆண்டும் கடைப்பிடிப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. தாமதமாக பந்துவீசுகின்ற பிரச்சனையை அதே சீசனில் முடித்து விட வேண்டும். அடுத்த ஆண்டு கொண்டு செல்லும் விதி வேண்டுமா என நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.’

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அந்த அணியுடனான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடாதது அந்த அணிக்கு சற்றுப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறத்தில் காயம் காரணமாக மும்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அவர் விலகி இருப்பதும் கூடுதல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<