IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவந்த முன்னணி துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ், உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
குஜராத் டைட்டண்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, இடது முன்கை பகுதியில் (forearm) ஏற்பட்ட உபாதை காரணமாக சூர்யகுமார் யாதவால் மிகுதி உள்ள போட்டிகளில் விளையாடமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை IPL தொடரில், 11 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியை தழுவி, 10வது இடத்தை பிடித்துள்ளது. இறுதியாக நேற்றைய தினம் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்விகளை பெற்றிருந்தாலும், சூர்யகுமார் யாதவ் மாத்திரம் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். 8 போட்டிகளில் விளையாடிய இவர் 43.29 என்ற ஓட்ட சராசரியில் 303 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
சூர்யகுமார் யாதவின் உபாதை தொடர்பில் அறிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், “சூர்யகுமார் யாதவின் இடது முன்கை தசையில் உபாதை ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், மிகுதி உள்ள போட்டிகளில் விளையாட மாட்டார். அத்துடன், இந்திய கிரிக்கெட் சபையின் வைத்தியக்குழு அவரை கண்கானித்துவருகின்றது” என குறிப்பிட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து வெளியேறியிருந்தாலும், அவருக்கான மாற்றுவீரரை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவிக்கவில்லை. எவ்வாறாயினும், மும்பை இந்தியன்ஸ் அணியானது ஏற்கனவே IPL பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<