இலங்கைக்கு எதிரான T20I தொடரிலிருந்து சூர்யகுமார், சஹார் நீக்கம்!

Sri Lanka tour of India 2022

1117

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள  மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இந்திய குழாத்திலிருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி, இந்தியா சென்றடைந்துள்ளது. முதல் போட்டி நாளைய தினம் (24) லக்னோவில் ஆரம்பமாகவுள்ளது.

>>பானுகவின் கிரிக்கெட்டிற்கு இது முடிவல்ல – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

குறித்த இந்த தொடருக்கான இந்தியா குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தீபக் சஹார் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு உபாதை காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியின் போது, பாதியில் மைதானத்தைவிட்டு வெளியேறினார். எனவே, இவர் முழு தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சூர்யகுமார் யாதவின் கையில், சிறிய எழும்பு முறிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், அவரும் முழுத்தொடரிலும் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த இரண்டு வீரர்களும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள போதும், இந்திய அணி மாற்று வீரர்களை அணியில் இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் இரண்டு வீரர்கள் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இலங்கை அணியின் வனிந்து ஹஸரங்க கொவிட்-19 தொற்று காரணமாக இந்திய தொடரில் விளையாடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், குசல் மெண்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் சிறிய உபாதைகள் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடவில்லை.

இந்தியா குழாம் – ரோஹித் சர்மா (தலைவர்), ருதுராஜ் கைகவட், ஷிரேயாஸ் ஐயர், சஞ்சு சம்சன், இசான் கிஷன், வெண்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்தி சஹால், ரவி பிஸ்னோய், குல்தீபு் யாதவ், மொஹமட் சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஸ பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, ஆவேஷ் கான்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<