ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் சுரேஷ் சுப்ரமணியம் போட்டி

230

முன்னாள் டென்னிஸ் வீரரும், இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் உப தலைவருமான சுரேஷ் சுப்ரமணியம் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முதற்தடவையாக போட்டியிடவுள்ளார்.  

இலங்கை விளையாட்டுத்துறையில் கடந்த காலங்களில் பல சர்ச்சைகளை உருவாக்கிய தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி நடத்துவதற்கு கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சங்கக்காரவினால் யோசனை

கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக்

ஆனாலும், தேசிய ஒலிம்பிக் சங்கத் தலைவராக கடந்த 22 வருடங்களாக இருந்துவந்த ஹேமசிறி பெர்னாண்டோ இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அவர் சார்பாக இலங்கை டென்னிஸ் அரங்கின் நிர்வாகியும், தற்போதைய டென்னிஸ் சங்கத்தின் உப தவைவருமான சுரேஷ் சுப்ரமணியம், தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, உப தலைவர் பதவிக்கு போட்டியிடும் இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவர் அசங்க செனெவிரத்ன உட்பட தலைவர் பதவிக்கு போட்டியிடும் டென்னிஸ் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் ஆகியோர் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தான் ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சுரேஷ் சுப்ரமணியம் கருத்து தெரிவிக்கையில், எப்போதும் சிறந்த முகாமைத்துவத்தை வழங்கி, திறமைமிகு வீரர்களை பலப்படுத்துவதற்கான பல செயற்றிட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன். மேலும், எதிர்காலத்தில் நாட்டிற்கு சிறந்த பெறுபேறுகளையும் புகழையும் அளிக்கும் வல்லமை ஒலிம்பிக் குழுவுக்கு உண்டு என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

அத்துடன், டென்னிஸ் விளையாட்டுக்கு மாத்திரமல்லாது ஒலிம்பிக் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து விளையாட்டு சங்கங்களினதும், முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து உதவி வழங்க தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மட்ட வீரர்களுக்கு விரைவில் தொழில் வாய்ப்பு – விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி

இதேவேளை, தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தெரிவாகாவிட்டாலும், தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி, தன்னுடைய சொந்த செலவில் சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட உள்ளக டென்னிஸ் மைதானமொன்றை நிர்மானித்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

அதற்காக 8 கோடி ரூபா பணத்தை செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளாகத் தெரிவித்த அவர், காலி முகத்திடலில் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு சிறப்பு அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ள இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வரான இளவரசர் எட்வர்ட் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கான அழைப்பு, 2016ஆம் ஆண்டு மென்செஸ்டரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு சம்மேளனத்திற்கு பங்கேற்க சென்றிருந்த போது இலங்கை டென்னிஸ் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும், முன்னாள் ஒலிம்பிக் சங்க செயலாளருமான மெக்ஸ்வெல் டி சில்வாவினால் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும் சிரேஷ்ட டென்னிஸ் முகாமைத்துவரான சுரேஷ் சுப்ரமணியம், 1981ஆம் ஆண்டு ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும், இலங்கையின் முதலாம்தர டென்னிஸ் வீரராகத் திகழ்ந்ததுடன், அக்காலப்பகுதியில் தேசிய சம்பியனாகவும் விளங்கினார். அத்துடன், 2002ஆம் ஆண்டு நடைபெற்ற டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பு

அத்துடன், 2006 முதல் ஆசிய டென்னிஸ் சம்மேளனத்தின் செயலாளராகக் கடமையாற்றி, தற்போது அதன் உப தலைவராகச் செயற்பட்டு வருகின்ற சுரேஷ் சுப்ரமணியம், 2002 முதல் 2007 வரையான காலப்பகுதியில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவராகச் செயற்பட்டதுடன், அதன்பிறகு 2009 முதல் 2012 காலப்பகுதியில் டென்னிஸ் தெரிவுக்குழுத் தலைவராகவும் கடமையாற்றினார்.

அத்தோடு தற்போதை நாட்களில் தேசிய ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிராக ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளால் சங்கத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் மீண்டும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற மெக்ஸ்வெல் டி சில்வா, தேர்தலில் வெல்வதற்கே நாம் போட்டியிடுகிறோம். எமக்கு விளையாட்டு சங்கங்களின் ஆதரவு முழுமையாகக் கிடைத்துள்ளது என்றார்.

எனவே, எமது அணிதான் ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் வெற்றிபெறும் என தான் நம்புவதாக ஒலிம்பிக் சங்க முன்னாள் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை ஜனவரி 9ஆம் திகதி நடத்துவதற்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் சங்க பொதுக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. எனினும், பெரும்பாலான விளையாட்டு சங்கங்களினது எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது மீண்டும் பெப்ரவரி 23ஆம் திகதி நடத்துவதாக ஏகமனதாக அறிவிக்கப்பட்டது.