போர்ட் எலிசபெத் நகரில், ‘பொக்சிங் டே’ என அழைக்கப்படும் டிசம்பர் 26ஆம் திகதி, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. இதன் முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது, தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் இலங்கை அணியினை வலுப்படுத்தியுள்ளார் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால்.
தற்போதைய இலங்கை அணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் இவர், இதுவரை அறியப்படாமல் இருக்கும் தன்னைபோன்ற திறமைமிக்க வீரர்களை இனங்கான கிராமப்புற கிரிக்கெட் முன்னேற்றப்பட வேண்டும் என்றும், அதற்குரிய ஆதரவுகள் அளிக்கப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்று (26) ஆரம்பமாகிய தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், அவ்வணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்துடன் வலுவான நிலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வேளையில், அணி 104 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அவ்வணியின் முதல் விக்கெட்டினை கைப்பற்றி லக்மல் போட்டியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் நேற்றைய ஆட்ட நேர நிறைவின் போது, அவர் 62 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி, தனது சிறப்பான டெஸ்ட் பந்து வீச்சினை பதிவு செய்து கொண்டதுடன், சவால் மிக்க தென்னாபிரிக்க அணியினை கட்டுக்குள் கொண்டுவரவும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். இதனால், நேற்றைய ஆட்ட நிறைவின் போது, தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களிற்கு 267 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில், ஹம்பந்தோட்டை மாவட்டத்திலிருந்து இலங்கை தேசிய அணிக்கு தெரிவாகிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருக்கும் லக்மால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்பொழுது,
“இன்றைய நாளிற்குரிய போட்டியில், வரவிருந்த சவால்களை எதிர்கொள்வதற்காக கடந்த இரு வாரங்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு தயாராகினோம். ஏனெனில், இலங்கையில் நாங்கள் பெற்றுக்கொண்டதை விட இங்கே முற்றிலும் வேறுவகையான நிலைமைகளே இருக்கின்றன “ என்றார்.
ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சாதனைகள் புரிந்த ஹம்பந்தோட்டை தெபரவெவ மகா வித்தியாலயத்தில், லக்மால் தனது பாடசாலை கல்வியினை பெற்றுக்கொண்டார். தற்போது அந்த பாடசாலைக்கு போதிய பொருளாதார ரீதியான ஊக்குவிப்பு இல்லாத காரணத்தினால் அங்கு கிரிக்கெட் படிப்படியாக மறைந்து வருகின்றது.
“தெபரவெவவின் தற்போதைய கிரிக்கெட்டின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அங்குள்ள வீரர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இன்னும் ஹம்பந்தோட்டையிலும் பல சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு போதியளவான ஊக்கம் அளிக்கப்படுமெனின், எம்மால் சிறந்த வீரர்களை அங்கிருந்து எதிர்பார்க்க முடியும்” என, தனது தற்போதைய சொந்த ஊரின் நிலையினை லக்மால் விவரித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தனஞ்சய டி சில்வாவை எடுத்துப்பாருங்கள். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையினை ஆரம்பித்தது தெபரவெவ மகா வித்தியாலயத்தில்தான். இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியிலும் எனது கிராமத்தினை சேர்ந்த ஒரு வீரர் இருக்கின்றார். இன்னும் ஐந்து வீரர்கள் தற்போது என்னுடன் முதல்தர போட்டிகளில் விளையாடுகின்றனர். மேலும் திறமையான பல வீரர்களும் உள்ளனர். நாம் அவர்களுக்கு ஊக்கம் மற்றும் ஆரதவினை அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த வீரர்களில் சிலர் பொருளதார ரீதியில் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்.
நான் கிரிக்கெட் விளையாடும் காலங்களில், எங்கள் கிராமத்தில் இருந்த வங்கியில் வேலை செய்யும் திரு. ரத்னபால அவர்கள் நாங்கள் கடினமான நிலைகளில் இருந்த போது, அவரின் பணத்தை செலவு செய்து, எனக்கும் எங்கள் ஊரில் கிரிக்கெட் விளையாட்டினை பார்த்துக் கொள்ளவும் உதவிகளை வழங்கியிருந்தார். நிர்வாகத்தினை விட, அவரின் தனிப்பட்ட பங்களிப்பே கிரிக்கெட்டில் முன்னேற பெரும் உதவியாக இருந்தது.
எனக்கு எப்போதெல்லாம் முடிகின்றதோ அப்போதெல்லாம் சென்று, எனது பாடசாலைக்கு உதவுவேன். இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்வதன் மூலமே, புதிய திறமையுள்ள வீரர்களை இனங்காண முடியும். அடுத்து, ஹம்பாந்தோட்டை பகுதியில் கிரிக்கெட்டை முன்னேற்றவும் பாரியதொரு முயற்சி எடுக்க வேண்டியிருக்கின்றது “ என்றார்.
இது லக்மாலிற்கு தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது தொடராகும். முன்னதாக, அவ்வணியுடன் இலங்கை A அணி சார்பாக 2008இல் லக்மல் விளையாடியிருந்தார். அது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும்பொழுது,
“அத்தொடரில் நான் எனது சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தேன், அதுவே என்னை தேசிய அணிக்கு தெரிவு செய்வதற்கு பெரிதும் காரணமாக இருந்தது“ என்றார்.
தான், தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சினால் அதிகம் கவரப்பட்ட ஒருவர் என்பதை லக்மால் இவ்வாறு குறிப்பிட்டார்.
“எனக்கு மிகவும் பிடித்த வீரர் டேல் ஸ்டெய்ன். கெட்டிக்கார பந்து வீச்சாளரான அவரின் பல வீடியோக்களைப் பார்ப்பேன். அவற்றில் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களினை அவர் எப்படி நுணுக்கமாக வீழ்த்துவார் என்பதை அவதானித்து, நானும் அதனை முயற்சிப்பேன்“ என்றார்.