இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்செலோ மெதிவ்ஸ் முழுமையான உடற்தகுதி அடைந்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளார். எனினும், பந்து வீசுவது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் சோபிக்கும் அஜந்த மெண்டிஸ்
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் ப்ரீமியர்……
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான சுப்பர் ப்ரொவின்சியல் (Super Provincial) கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 4ம் திகதி முதல் 11ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (01) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தம்புள்ளை அணியின் தலைவர் என்ற ரீதியில் கலந்துக்கொண்டிருந்த போதே, அஞ்செலோ மெதிவ்ஸ் குறித்த விடயத்தினை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“தற்போது என்னுடைய உபாதை முழுமையாக குணமடைந்துள்ளது. எனது பயிற்சிகள் அனைத்தையும் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் மேற்கொண்டிருந்தேன். அதன் பின்னர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடினேன். ஆனால், இதுவரை பந்து வீசுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. தற்போதைக்கு பந்து வீசுவதற்கான எண்ணம் இல்லை. தேர்வுக் குழுவிடம் கலந்துரையாடி, முழுநேர துடுப்பாட்ட வீரராக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளேன்” என்றார்.
Photos: Trophy Launch of the Super Provincial One Day Tournament 2019
அதேநேரம் இந்தப் போட்டித் தொடர் குறித்து கருத்து வெளியிட்ட இவர்,
“இந்த சுப்பர் ப்ரொவின்சியல் தொடரானது உலகக் கிண்ணத்துக்கு முன்னர் விளையாடும் முக்கிய தொடர் என்பதுடன், வீரர்களுக்கு மிக முக்கிய தொடராகும். வீரர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தினால், உலகக் கிண்ண குழாத்துக்குள் இடம்பெற முடியும். அதனால், அனைத்து வீரர்களும் தங்களால் முடிந்தளவு சிறப்பாக விளையாட வேண்டும்”
இந்தப் போட்டி தொடர் குறித்து கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,
“முதலாவதாக இதுபோன்ற தொடரொன்றை நடத்துவதற்கு கிரிக்கெட் சபைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த தொடரானது வீரர்களாகிய எமக்கு மிகவும் பெறுமதிமிக்க தொடராகும். விஷேடமாக புதிய வீரர்கள் தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். அதேநேரம், கொழும்பு அணியென்ற ரீதியில் நாம் முழுயைமாக தயாராகியிருக்கிறோம்” என்றார்.
இந்நிலையில் லசித் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதன் காரணமாக காலி அணியின் தலைவராக லஹிரு திர்மான்னே நியமிக்கப்பட்டுள்ளார். தொடர் குறித்து அவர் குறிப்பிடுகையில்,
“கழக மட்ட போட்டிகளை தொடர்ந்து எமக்கு சிறந்த வாய்ப்பொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நான்கு அணிகள் உள்ளன. கழக மட்ட போட்டிகளில் பிரகாசித்த முக்கிய வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சிறந்த வாய்ப்பு என்பதுடன், உலகக் கிண்ணம் நெருங்கி வரும் நிலையில் எமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திமுத் கருணாரத்னவின் மீது தற்போது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகக் கிண்ண குழாத்தில் திமுத் கருணாரத்ன இடம்பெறுவார் எனவும், ஒருவேளை அவர் அணித்தலைவராகவும் செயற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு பின்னர் திமுத் கருணாரத்ன சர்வதேசத்தில் நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இன்றைய நிகழ்வில் திமுத் கருணாரத்ன குறிப்பிடுகையில்,
“நான் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. எனினும், 2015ம் ஆண்டுக்கு பின்னர் உள்ளூரில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரில் சிறப்பாக செயற்பட்டுள்ளேன். வாய்ப்பு கிடைத்த ஒவ்வொரு முறையும் ஓட்டங்களை குவித்துள்ளேன். அதேநேரம், தென்னாபிரிக்காவில் இருந்து திரும்பிய நான், இலங்கை வந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடினேன்.
எனவே, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாட எதிர்பார்க்கிறேன். இந்த தொடரில் பிராகசிக்க விரும்புவதுடன், ஏனைய அணிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்“ என்றார்
நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் திமுத் கருணாரத்ன
இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத்……
இவ்வாறு, வீரர்களுக்கு மத்தியில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த தொடரிலிருந்து சில முக்கிய வீரர்கள் உபாதை காரமணாக வெளியேறியுள்ளனர். இதில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள அசேல குணரத்ன மற்றும் தசுன் ஷானக விலகியுள்ளதுடன், அசேன் பாண்டாரவும் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிரிக்கெட் சபையின் அனுமதியை அடுத்து ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுப்பர் ப்ரொவின்சியல் தொடருக்கான பரிசு விபரங்கள்
முதல் இடம் – கிண்ணம் மற்றும் ஒரு மில்லியன் பணப்பரிசு
இரண்டாவது இடம் – கிண்ணம் மற்றும் 750,000 பணப்பரிசு
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<