சனிக்கிழமை (06) சுகததாச அரங்கில் இடம்பெற்ற சுபர் லீக் முன் பருவப் போட்டிகளில் ரெட் ஸ்டார்ஸ் அணி 2-1 என ரினௌன் அணியையும், அப் கண்ட்ரி லயன்ஸ் அணி 3-0 என புளூ ஈகல்ஸ் அணியையும் வெற்றி கொண்டு இந்த பருவத்தில் தமது முதல் வெற்றிகளைப் பதிவுசெய்துகொண்டன.
ரினௌன் வி.க எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க
ரெட் ஸ்டார்ஸ் வீரர்கள் தமது முதல் போட்டியில் புளூ ஸ்டார் அணியிடம் 2-0 எனவும், இரண்டாம் போட்டியில் டிபெண்டர்ஸ் அணியிடம் 2-1 எனவும் தோல்வி கண்ட நிலையில் தமது முதல் வெற்றிக்காக இந்தப் போட்டியில் மோதினர். எனினும், ரினௌன் அணிக்கு இது முதல் போட்டியாக இருந்தது.
>> புளூ ஸ்டாரை வீழ்த்திய ரட்னம் அணிக்கு முதல் வெற்றி
போட்டி ஆரம்பித்து இரண்டு நிமிடங்களில் ரினௌன் வீரர் திலிப் பீரிஸ் எதிரணியின் கோல் எல்லையில் தனியே இருந்து பெற்ற பந்தை வெளியே அடித்து வாய்ப்பை வீணடித்தார்.
தொடர்ந்து ரெட் ஸ்டார்ஸ் வீரர்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அணித் தலைவர் ரமீஸ் பெற்றார். அவர் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது.
மீண்டும், போட்டியின் 40ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டியை பர்ஹான் கோலாக்கினார்.
எனினும், போட்டியின் முதல் பாதி நிறைவடையும் நிமிடத்தில் ரினௌன் வீரர் அமான், பெனால்டி பெட்டிக்கு வெளியில் ஒரு திசையில் இருந்து உதைந்த பந்து கம்பங்களுக்குள் செல்ல, ஆட்டம் சமநிலையானது.
முதல் பாதி: ரினௌன் வி.க 1 – 1 ரெட் ஸ்டார்ஸ் கா.க
இரண்டாவது பாதியின் முதல் 10 நிமிடங்களுக்குள், முன்களத்தில் மிகவும் வேகமாக செயற்பட்ட உஸ்மான் ரெட் ஸ்டார்ஸ் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்று அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்த ஆட்டத்தில் ரினௌன் அணியினர் தமது பந்துப் பரிமாற்றங்களில் தொடர்ச்சியாக தவறுகளை மேற்கொண்டனர். இதனால் ரெட் ஸ்டார்ஸ் அணியினர் அடுத்தடுத்து கோலுக்கான வாய்ப்புக்களைப் பெற்றாலும் அவற்றை சிறப்பாக நிறைவு செய்யவில்லை.
எனவே, இரண்டாவது பாதியில் பெறப்பட்ட மேலதிக கோலினால் ரெட் ஸ்டார்ஸ் அணியினர் 2-1 என போட்டியை வென்றனர்.
இந்தப் போட்டியின் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தமையினால் இரண்டு அணிகளுக்கும் பந்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்வதில் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டன.
முழு நேரம் : ரினௌன் வி.க 1 – 2 ரெட் ஸ்டார்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- ரெட் ஸ்டார்ஸ் கா.க – M. பர்ஹான் 40′ (P), M. உஸ்மான் 53′
- ரினௌன் வி.க – அமான் பைசர் 45+1′
மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
- ரெட் ஸ்டார்ஸ் கா.க – M. நுஸ்கி 48′, M. நஜ்மான் 90+3′
- ரினௌன் வி.க – M. ரிஸ்கான் 18′
புளூ ஈகல்ஸ் கா.க எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
இந்தப் போட்டியில் மோதிய புளூ ஈகல்ஸ் அணிக்கு இதற்கு முன்னர் ஒரு சமநிலையான முடிவையும், ஒரு தோல்வியையும் பெற்றிருந்தது. அப் கண்ட்ரி லயன்ஸ் அணி தமது முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தது.
Watch – தொடர்ச்சியாக இந்த பருவகாலமும் GOLDEN BOOTஐ வெல்வாரா மெஸ்ஸி? | FOOTBALL ULAGAM
இந்த மோதலின் முதல் பாதி ஆட்டத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் தமக்கிடையிலேயே அதிக நேரம் பந்தை வைத்து விளையாடினர்.
இந்நிலையில், ஆட்டத்தின் முதல் கோலை எவன்ஸ் பெற்றார். எதிரணி வீரர்கள் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை அப் கண்ட்ரி பின்கள வீரர் சிமொன்ஸ் தடுத்தபோது, பந்தைப் பெற்ற எவன்ஸ் வேகமாக பந்தை எதிரணி கோலுக்குள் எடுத்துச் சென்று கோல் காப்பாளரின் கால்களுக்குள்ளால் பந்தை செலுத்தி அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
முதல் பாதி: புளூ ஈகல்ஸ் கா.க 0 – 1 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 8 நிமிடங்களில் கவிந்து இஷான் வழங்கிய பந்தைப் பெற்ற வசீம், பின்கள வீரரையும் கோல் காப்பாளரையும் கடந்து பந்தை எடுத்துச் சென்று இரண்டாவது கோலையும் பெற்றார்.
மீண்டும் 79ஆவது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது கவிந்து இஷான் உதைந்த பந்து கம்பங்களுக்குள் செல்ல, ஆட்டம் நிறைவடையும்போது 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் தமது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
முழு நேரம்: புளூ ஈகல்ஸ் கா.க 0 – 3 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க – அசன்டே எவன்ஸ் 19, வசீம் ராசிக் 53, கவிந்து இஷான் 79
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<