சுகததாச அரங்கில் புதன்கிழமை (24) இடம்பெற்ற சுபர் லீக் முன் பருவ கால்பந்து தொடரின் இறுதி மோதல்களில் அப் கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகம், சீ ஹோக்ஸ் கால்பந்து கழகத்தை 4-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்த, அடுத்த மோதலில் ரினௌன் விளையாட்டுக் கழகம் 6-0 என ரட்னம் விளையாட்டுக் கழகத்தை இலகுவாக வீழ்த்தியது.
சீ ஹோக்ஸ் கா.க எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
இதற்கு முன்னர் சீ ஹோக்ஸ் வீரர்கள் ஆடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்றிருந்த நிலையிலும், அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியைப் பெற்ற நிலையிலும் இந்தப் போட்டியில் களமிறங்கினர்.
>> வெற்றியுடன் முன் பருவத்தை முடித்த கொழும்பு, ப்ளூ ஸ்டார் அணிகள்
போட்டியின் 25வது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து சீ ஹோக்ஸ் வீரர் ஜேசுதாசனின் கைகளில் பட்டமையினால் அப் கண்ட்ரி லயன்ஸ் அணிக்கு கோணர் வாய்ப்பு கிடைத்தது. அதனை கவிந்து இஷான் கோலாக்கி, இந்த பருவத்தில் தனது 6ஆவது கோலைப் பதிவு செய்தார்.
இதுவே, போட்டியின் முதல் பாதியில் பெறப்பட்ட ஒரே கோலாக அமைந்தது.
முதல் பாதி: சீ ஹோக்ஸ் கா.க 0 – 1 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
போட்டியின் 57ஆவது நிமிடத்தில் சிறந்த பரிமாற்றங்களின் பின்னர் பெற்ற பந்தினால் ஜப்பான் வீரர் கனெஷிரோ சீ ஹோக்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். எனினும், அடுத்த நிமிடம் ப்ரீ கிக் வாய்ப்பின்போது தமது அணியின் திசையில் இருந்து உள்வந்த பந்தை எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்த அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர் அஞ்சன காலால் தட்டி முன்னிலை கோலைப் பெற்றார்.
மீண்டும் போட்டியின் 82ஆம் நிமிடத்தில் தனுஷ்க மதுசங்க சீ ஹோக்ஸ் அணிக்கான சமநிலை கோலைப் பெற்றார். எனினும், முன்னர் போன்றே மேலும் 3 நிமிடங்களுக்குள் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி மரியதாஸ் நிதர்சன் மூலம் மூன்றாவது கோலைப் பெற்றது.
ஆட்டத்தின் உபாதையீடு நேரத்தில் மீண்டும் கவிந்து இஷான் கோலுக்கு தொலைவில் இருந்து அப் கண்ட்ரி அணிக்கான நான்காவது கோலையும் பெற, போட்டி முடிவில் 4-2 என மேலதிக இரண்டு கோல்களால் அவ்வணி வெற்றி பெற்றது.
முழு நேரம்: சீ ஹோக்ஸ் கா.க 2 – 4 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
இந்த கோலின்மூலம் கவிந்து இஷான் இந்த முன் பருவத் தொடரில் மொத்தமாக 7 கோல்களைப் பெற்று, அதிக கோல்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.
முழு நேரம்: சீ ஹோக்ஸ் கா.க 2 – 4 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
சீ ஹோக்ஸ் கா.க – M. கனெஷிரோ 57′, தனுஷ்க மதுசங்க 82′
அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க – கவிந்து இஷான்25′ & 90+2′, அஞ்சன விக்ரமசிங்க 58′, மரியதாஸ் நிதர்சன் 85′
ரட்னம் வி.க எதிர் ரினௌன் வி.க
இந்தப் போட்டியில் மோதிய ரட்னம் அணி இதற்கு முன்னர் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. ரினௌன் அணி தாம் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது.
>> இரண்டாவது வெற்றியை சுவைத்த சீ ஹோக்ஸ், ரெட் ஸ்டார் அணிகள்
இந்நிலையில், ஆட்டம் ஆரம்பித்த 5ஆவது நிமிடத்தில் ரசாவும், 7ஆம் 14ஆம் நிமிடங்களில் திலிப் பீரிசும் அடுத்தடுத்து கோல்களைப் பெற, முதல் 15 நிமிடங்களுக்குள் ரினௌன் வீரர்கள் 3 கோல்களால் முன்னிலை பெற்றனர்.
முதல் பாதி: ரட்னம் வி.க 0 – 3 ரினௌன் வி.க
இரண்டாம் பாதியின் 64ஆவது நிமிடத்தில் திலிப் அடுத்த கோலையும் பெற்று தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து, மேலும் 3 நிமிடங்களில் ரினௌன் அணிக்கான ஐந்தாவது கோலையும் திலிப் பெற்றுக் கொடுத்துவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
திலிப் பீரிசிற்கு மாற்று வீரராக வந்த அபாம் அக்ரம் 83ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கான ஆறாவது கொலையும் பதிவு செய்தார். இது முன் பருவத்தில் ரினௌன் அணி பெறும் முதல் வெற்றியாகும்.
மறுமுனையில் ரட்னம் வீரர்கள் இந்த முன் பருவத் தொடரில் முன்னைய போட்டிகளில் காண்பித்ததை விட மிக மோசமான ஒரு ஆட்டத்தையே காண்பித்தனர்.
எனவே, போட்டி நிறைவில் 6-0 என வெற்றி பெற்ற ரினௌன் அணி தொடரில் இரண்டாவது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன்னர் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் 7-0 என நியு யங்ஸ் அணியை வெற்றி கொண்டிருந்தமையே தொடரின் சிறந்த வெற்றியாக உள்ளது.
முழு நேரம்: ரட்னம் வி.க 0 – 6 ரினௌன் வி.க
கோல் பெற்றவர்கள்
ரினௌன் வி.க – ரசா ரூமி 5‘, திலிப் பீரிஸ் 7′, 14′, 64′, 67′, அபாம் அக்ரம் 83′
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<