வெற்றி நடையை தொடரும் புளூ ஸ்டார்; ரட்னம் – புளூ ஈகல்ஸ் மோதல் சமநிலை

Super League 2021

310

சுபர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது வாரத்திற்கான இறுதி இரண்டு போட்டிகளில் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3-1 என டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தை வெற்றி கொள்ள, ரட்னம் மற்றும் புளூ ஈகல்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டி கோல்கள் இன்றி சமநிலை பெற்றது.

டிபெண்டர்ஸ் கா. எதிர் புளூ ஸ்டார் வி.

சுபர் லீக் தொடரில் சம்பியன் கிண்ணத்திற்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் அணிகளில் ஒன்றான புளூ ஸ்டார் கட்டாய வெற்றியொன்றை நோக்கி இந்தப் போட்டியில் களம் கண்டது.

சுகததாஸ அரங்கில் வியாழக்கிழமை (30) மாலை ஆரம்பமான இந்தப் போட்டியின் 35 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் மத்திய களத்தில் புளூ ஸ்டார் வீரர்களுக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது அவ்வணியின் பின்கள வீரர் ஜெர்ரி நேராக கோலின் வலது புறத்தினால் பந்தை செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

எனினும், போட்டியை சமப்படுத்துவதற்கான கோலை டிபெண்டர்ஸ் வீரர் சஜித் குமார போட்டியின் 43ஆவது நிமிடத்தில் போட, முதல் பாதி சமநிலையில் நிறைவுற்றது.

எனினும், புளூ ஸ்டார் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் பிரகாசிக்கும் இளம் வீரர் செனால் சந்தேஷ் இரண்டாம் பாதியின் 63ஆவது மற்றும் 85ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் பெற்று அவ்வணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த இரண்டு கோல்களுடன் செனால் தொடரில் 7 கோல்களைப் பெற்று அதிக கோல்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

இந்த வெற்றியுடன் புளூ ஸ்டார் அணி தொடரில் 5 வெற்றிகள் மற்றும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் முதலிடத்திற்கு மீண்டும் முன்னேற்றம் கண்டது.

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா. 1 – 3 புளூ ஸ்டார் வி.

கோல் பெற்றவர்கள்       

டிபெண்டர்ஸ் கா. – சஜித் குமார 43’

புளூ ஸ்டார் வி. – ஜெர்ரி ஒம்பெம்பெ 36’, செனால் சந்தேஷ் 63’ & 85’

புளூ ஈகல்ஸ் வி. எதிர் ரட்னம் வி.

இதே தினத்தில் இரவு இடம்பெற்ற அடுத்த போட்டியில் தரப்படுத்தலில் இறுதி இரண்டு இடங்களிலும் உள்ள இவ்விரண்டு அணிகளும் சுபர் லீக் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்வதற்காக களம் கண்டன.

எனினும், போட்டியின் முதல் பாதி நிறைவில் இரண்டு அணிகளும் எந்தவித கோல்களையும் பெறாத நிலையில், இரண்டாம் பாதியிலும் இரு அணிகளுக்கும் ஒரு கோலையேனும் பெற முடியாமல் போனது.

எனவே, இந்தப் போட்டி சமநிலையில் முடிந்தமையினால் தொடரில் வெற்றியொன்றையேனும் பதிவு செய்யாத அணிகளாக தொடர்ந்தும் ரட்னம் மற்றும் புளூ ஈகல்ஸ் அணிகள் நீடிக்கின்றன.

முழு நேரம்: புளூ ஈகல்ஸ் வி. 0 – 0 ரட்னம் வி.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<