சுபர் லீக் கால்பந்து தொடரின் நான்காம் வாரத்திற்கான இறுதி இரண்டு போட்டிகளிலும் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் மற்றும் நியு யங்ஸ் கால்பந்து கழகம் என்பன வெற்றி பெற்று, இரண்டு அணிகளும் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ரட்னம் வி.க எதிர் டிபெண்டர்ஸ் கா.க
செவ்வாய்க்கிழமை (07) சுகததாஸ அரங்கில் முதல் ஆட்டமாக மாலை ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் டிபெண்டர்ஸ் வீரர் மைதானத்தின் ஒரு திசையில் இருந்து ரட்னம் கோல் எல்லைக்குள் செலுத்திய பந்தை ரட்னம் பின்கள வீரர்கள் எவரும் தடுக்காமையினால், அங்கிருந்த லக்ஷித்த ஜயதுங்க அதனை ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
- அப் கண்ட்ரி லயன்ஸை வீழ்த்திய சீ ஹோக்ஸ்; ரினௌன் – புளூ ஸ்டார் மோதல் சமநிலையில்
- இறுதி நிமிடத்தில் வெற்றியைத் தவறவிட்ட ரெட் ஸ்டார்ஸ்
- டிபெண்டர்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய அப்கண்ட்ரி லயன்ஸ்
- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணம் சீசெல்ஸ் வசம்
முதல் பாதியில் முன்னிலை பெற்ற டிபெண்டர்ஸ் வீரர்களுக்கு, இரண்டாம் பாதி ஆரம்பமாகி மூன்று நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ரட்னம் பின்கள வீரர் ஹகீம் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் ஆடியமைக்காக கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை ரிப்கான் கோலாக்கினார்.
எனினும், ஆட்டத்தின் 75 நிமிடங்கள் கடந்த நிலையில் ரட்னம் வீரர் அபிஷேக் எதிரணியின் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமையினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பினால் ஹகீம் ரட்னம் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
பின்னர் போட்டியில் எந்தவித கோலும் பெறப்படாத நிலையில், ஆட்ட நிறைவில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற டிபெண்டர்ஸ் வீரர்கள் சுபர் லீக் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்ய, ரட்னம் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாக அமைந்தது.
முழு நேரம்: ரட்னம் வி.க 1 – 2 டிபெண்டர்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- ரட்னம் வி.க – மொஹமட் ஹகீம் 76’
- டிபெண்டர்ஸ் கா.க – லக்ஷித்த ஜயதுங்க 40’, ரிப்கான் மொஹமட் 48’(P)
புளூ ஈகல்ஸ் கா.க எதிர் நியு யங்ஸ் கா.க
அதே அரங்கத்தில் இரண்டாவது போட்டியாக இரவு ஆரம்பமான இந்தப் போட்டி ஆரம்பித்தது முதல் இரண்டு அணிகளும் மிகவும் வேகமான ஆட்டத்தை காண்பித்தனர்.
இதன் பலனாக இரு அணியினரும் கோலுக்கான வாய்ப்புக்களை பெற்றதுடன், சிறந்த தடுப்பாட்டத்தையும் மேற்கொண்டனர்.
எனினும், போட்டியின் 38 ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் நியு யங்ஸ் வீரர் ரமேஷ் மென்டிஸ் வழங்கிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தின்மூலம் முஷிகான் நியு யங்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
மீண்டும் முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் நியு யங்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, புளூ ஈகல்ஸ் கோல் காப்பாளர் றுவன் அருனசிறி தடுக்க, முதல் பாதி நியு யங்ஸ் அணியின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்கள் கடப்பதற்குள் மிக வேகமாக செயற்பட்ட நியு யங்ஸ் அணிக்கு இளம் வீரர் ரமேஷ் மென்டிஸ் அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோலுக்கு அண்மையில் பல வீரர்களிடையே கோலுக்காகவும், அதனை தடுப்பதற்காகவும் இடம்பெற்ற முயற்சிகளின் பின்னர் புளூ ஈகல்ஸ் வீரர் லசித்த பெர்னாண்டோ அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
எனவே, போட்டி நிறைவில் 2-1 என வெற்றி பெற்ற நியு யங்ஸ் வீரர்கள் டிபெண்டர்ஸ் அணியைப் போன்றே இந்த தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.
முழு நேரம்: புளூ ஈகல்ஸ் கா.க 1 – 2 நியு யங்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- புளூ ஈகல்ஸ் கா.க – லசித்த பெர்னாண்டோ 86’
- நியு யங்ஸ் கா.க – முஷிகான் 38’, ரமேஷ் மென்டிஸ் 54’
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<