டயலொக் சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 போட்டிகள் மீண்டும் ஒத்திவைப்பு

657
Dialog Champions League 2016

டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016ஆம் ஆண்டுக்கான சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரப் போட்டிகளை மீண்டும் ஒத்திவைக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் உள்ளாகியுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை இப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனை மேலும் ஒத்திவைப்பது தற்பொழுது பல தரப்பினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரப் போட்டிகள் எதிர்வரும் 11ஆம், 13ஆம் திகதிகளில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 12ஆம் திகதி முஸ்லிம்களின் புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என்பதனால், 11ஆம் திகதி இடம்பெறவிருந்த போட்டிகள் 14ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை இலங்கை கால்பந்து சம்மேளனம் கடந்த 8ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அதற்கு மறுதினம் (செப். 9ஆம் திகதி) கால்பந்து சம்மேளனம் மற்றொரு அறிவிப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டது.

அதில் ’13ஆம், 14ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த சுப்பர் 8 சுற்றின் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு மீண்டும் போட்டிகள் பிற்போடப்படுவது குறித்த செய்தி கழகங்கள், வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, இது இலங்கை தேசிய கால்பந்து அணி எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ள கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கான சுற்றுப் பயணம், ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் நற்புறவுக் கிண்ணத் தொடர் உட்பட அனைத்தையும் பாதிக்கும் வகையில் அமையும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு நெருங்கிய மட்டங்களில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்களின்படி, இலங்கை தேசிய அணியின் பயிற்சிகள் கிழமை நாட்களிலேயே இடம்பெறுகின்றன. எனவே டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டிகளின் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளை கிழமை நாட்களில் நடத்துவது, தமது பயிற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தமையினாலேயே இந்த போட்டி ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவ்வாறான முடிவுகள் இலங்கையின் கால்பந்து தரப்பினருக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் உள்ள சிக்கல்களையே காண்பிக்கின்றன. எனவே, போட்களை ஒத்திவைத்தல் மற்றும் அது தொடர்பில் ஊடக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர், போட்டி ஏற்பாட்டுக் குழு ஏன் தேசிய அணியின் நிர்வாகத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ஒரு குழப்பமற்ற முடிவுக்கு வருவதில்லை என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

இவ்வாறு போட்டி உத்திவைக்கப்படுவது இது முதலாவது சந்தர்ப்பமல்ல. போட்டிகளுடன் தொடர்புபடும் இரு தரப்பினருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற தகவல் பரிமாற்றத்தினால் ஏற்கனவே, சுப்பர் 8 சுற்றின் ஆரம்பப் போட்டிகள் இடம்பெறும் தினங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இலங்கை கால்பந்தின் அனைத்து தரப்பினரும் சிறந்த முறையில் தொடர்பாடலையும், கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டு இதன் பின்னராவது இவ்வாறு குழப்பங்களை தோற்றுவிக்கும் முடிவுகளை எடுப்பதில் இருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.