தற்பொழுது இடம்பெற்று வரும் 2016ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரின் சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பித்து நான்கு வார போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்தொடரின் கிண்ணத்தை வெல்வதற்கான கனவுடன் மூன்று அணிகள் இருக்கின்றன.
இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில், குறித்த மூன்று அணிகளும் போட்டி முடிவுகளை தமக்கு சாதகமாக்கி கிண்ணத்தை சுவீகரிக்க என்னென்ன செய்ய வேண்டி இருக்கின்றது என்பது குறித்து ThePapare.com ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அம்மூன்று அணிகளான கொழும்பு கால்பந்து கழகம் (Colombo FC), ரினௌன் விளையாட்டுக் கழகம் (Renown SC) மற்றும் ப்ளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் (Blue Star SC) ஆகிய அணிகள் கிண்ணத்தை வெல்வதற்கான இலக்குகளை கொண்டிருப்பினும், அதற்காக அவை செய்ய வேண்டியவை குறித்து நோக்குவோம்.
ப்ளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் DCL தொடரினை வெற்றி பெற….
சூப்பர் 8 சுற்றின் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ப்ளு ஸ்டார் அணியானது 8 புள்ளிகளை பெற்று இத்தொடரின் தற்போதைய புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற காரணத்தினால், இத்தொடரின் கிண்ணத்தினை வெல்வது இவ்வணிக்கு சற்று கடினமாக இருக்கின்றது.
எனினும் அவர்கள் இத்தொடரில் வழங்கப்படவிருக்கும் பரிசினை தட்டிச்செல்ல முதலாவதாக, சொலிட் கழகத்துடன் நடக்கவிருக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதனை தொடர்ந்து வரும் முக்கிய இரண்டு போட்டிகளையும் ப்ளு ஸ்டார் அணி சந்தித்து அவற்றிலும் சாதிக்க வேண்டும்.
அதில் ஒரு போட்டியில், நடப்பு சம்பியனாக இருக்கும் சவால் மிக்க அணியான கொழும்பு கால்பந்து கழகத்தினை சந்திக்க வேண்டி இருப்பதோடு, மற்றைய போட்டியில் அதே சவாலுக்கு சற்றும் சளைக்காத இராணுவப்படை அணியையும் அவ்வணி சந்திக்க வேண்டி உள்ளது.
இம்மூன்று போட்டிகளையும் வெற்றி கொள்வார்களாயின் ப்ளு ஸ்டார் அணியினர் கிண்ணம் வெல்வதற்கான வாய்ப்பினை அதிகரித்துக்கொள்வர்.
இத்தொடரில் வெற்றிபெற ப்ளு ஸ்டார் கழகம் 17 புள்ளிகள் வரையில் பெற வேண்டிய நிலையில், ஏனைய போட்டிகளின் முடிவுகளிலும் அவர்களது கிண்ணத்திற்கான வெற்றி வாய்ப்பு தங்கியிருக்கின்றது.
ரினௌன் கழகம் இத்தொடரில் தமக்கிருக்கும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுமாயின், அதன் கோல் வித்தியாசங்களும் ப்ளு ஸ்டார் அணியின் கிண்ணம் வெல்லும் வாய்ப்பில் செல்வாக்கு செலுத்தும் என்பதால், ப்ளு ஸ்டார், சொலிட் கழகத்துடனான போட்டியில் பாரிய கோல்கள் வித்தியாசத்துடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது.
முக்கிய போட்டி: கொழும்பு கால்பந்து கழகம் (6 ஆவது வாரப் போட்டி)
முன்னதாக, இத்தொடரின் குழு நிலை ஆட்டம் ஒன்றின் போது கொழும்பு கால்பந்து கழகத்தினை 1 – 0 என்ற கோல் கணக்கில் ப்ளு ஸ்டார் கழகம் வீழ்த்தியிருந்த காரணத்தினால், அது அவ்வணிக்கு எதிர்வரும் முக்கிய போட்டிகளில் தன்னம்பிக்கையூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது.
கொழும்பு கழகத்தினை ப்ளூ ஸ்டார் வெற்றிகொள்ளுமாயின் அவ்வெற்றியானது, இத்தொடரின் இறுதி வாரத்தில் நடைபெற இருக்கும் அவ்வணிக்கு பெரும் சவால் மிக்க இராணுவப்படை அணியுடனான போட்டியில் சிறப்பாக செயற்பட உறுதுணையாக அமையும்.
ரினௌன் விளையாட்டுக் கழகம் இத்தொடரில் வெற்றி பெற…
இத்தொடரில் சிறப்பாக ஆடியிருந்த ரினௌன் விளையாட்டுக் கழகம் 9 புள்ளிகளுடனும், +6 என்கிற கோல் வித்தியாசத்துடனும் சூப்பர் 8 சுற்றின் தற்போதைய தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ரினௌன் கழகத்திற்கு, 2 தொடர்ச்சியான வெற்றிகளுடன் சூப்பர் 8 சுற்றின் இறுதி வாரத்தினை தொடுவது இத்தொடரில் முதல் நிலை அணியாக வருவதற்கான சவாலாக உள்ளது.
ஆனால், தொடரில் முன்னிலை அணியான கொழும்பு கால்பந்து கழகம் அணியுடனான போட்டியில் ரினௌன் அணி இறுதி வாரத்திலேயே மோதவுள்ளது. இது ரினௌன் கழகத்தின் இத்தொடர் நிலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
அத்துடன், வரும் போட்டிகளில் கடற்படை அணியுடனும், விமானப்படை விளையாட்டு கழக அணியுடனுமே அவ்வணி மோத இருப்பதால் அதுவும் ரினௌன் கழத்திற்கு ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகின்றது. மேலும் இத்தொடரில் தமது விதியினை தீர்மானிக்கும் வலுவான கட்டுப்பாட்டுக்குள்ளேயே ரினௌன் கழகம் இருக்கின்றது.
முக்கிய போட்டி: கொழும்பு கால்பந்து கழகம் (7 ஆவது வாரப் போட்டி)
ரினௌன் கழகம் தனது இறுதி இரண்டு சந்திப்புகளின் போதும் கொழும்பு விளையாட்டு கழகத்தினை சிறப்பாக கையாண்டிருந்தது. கொழும்பு கால்பந்து கழகமும் அதே மாதிரியாகவே ரினௌன் கழகத்தினை எதிர்கொண்டிருந்தது.
2015 ஆம் ஆண்டிற்கான DCL தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் (23 ஆவது போட்டி) சிறப்பான ஆட்டத்துடன் கொழும்பு கால்பந்து கழகத்தினை 2-1 என்றவாறு ரினௌன் கழகம் வீழ்த்தியிருந்தது. அதனையடுத்து கொழும்பு கால்பந்து லீக் ஜனாதிபதி கிண்ணத்தினை இரு அணிகளும் 1 – 1 என கோல்கள் பெற்று சமநிலையுடன் பகிர்ந்து கொண்டன. எனினும், இறுதிப்போட்டிக்கு முன்னதாக கொழும்பு கால்பந்து கழகம் ஏதேனும் புள்ளிகளை தவறவிட்டு 8 ஆவது வாரத்தில் இடம்பெற இருக்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை அடையும் எனின், இம்முறை DCL சம்பியனாக ரினௌன் கழகம் நாமம் சூடுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
இரு அணிகளும் அனுபவத்திலும் சரி, விளையாடும் விதத்திலும் சரி சமமாகவே இருக்கின்றன. ஆக, இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதனை அனுமானிப்பது கடினமானது. இரு அணிகளில் எந்த அணி ஆக்ரோஷமாக தாக்குதல் ரீதியான ஆட்டத்துடன் செயற்படுகின்றதோ அந்த அணியின் பக்கமே வெற்றி சாதகமாய் இருக்கும்.
இரு அணிகளுக்கு இடையிலும் நடக்க இருக்கும் இறுதிப்போட்டியானது இத்தொடரின் சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவே அமையலாம் என நம்பப்படுகின்றது.
கொழும்பு கால்பந்து கழகம் தொடரினை வெற்றி கொள்ள…
கொழும்பு கால்பந்து கழகம், இத்தொடரின் சூப்பர் 8 போட்டிகளில் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தில் 10 புள்ளிகளுடனும், +5 என்கிற கோல்கள் வித்தியாசத்துடனும் இருப்பதன் காரணமாக இத்தொடரில், தமது சம்பியன் பட்டத்தினை கடந்த தொடர் போன்று, தக்க வைத்துக்கொள்ள வசதியாக உள்ளது.
கொழும்பு கால்பந்து கழகம் இத்தொடரில், முன்னேற இரண்டு கடின ஆட்டங்களை கடினமாக போராடி கடக்க வேண்டி இருக்கும். போட்டியின் இறுதி இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள ப்ளு ஸ்டார் கழகத்திற்கு எதிரானதும், ரினௌன் கழகத்திற்கு எதிரானதுமான போட்டிகளே அவையிரண்டுமாகும். தொடரின் வெற்றியாளராக ஆகுவதற்கு மேலும் 7 புள்ளிகள் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு தேவையாக இருக்கின்றது. ரினௌன் கழகத்துடனான இறுதிப்போட்டியில் 7 புள்ளிகள் தேவையாக இருக்கும் கொழும்பு கழகம் 6 புள்ளிகளை பெறும் எனில், கொழும்பு கால்பந்து கழகம் ஏனைய நிறைவுற்ற போட்டிகளின் முடிவுகளில் தங்கியிருக்க வேண்டி வரும்.
முக்கிய போட்டி: ப்ளூ ஸ்டார் கழகம் (7 ஆவது வாரப் போட்டி)
கொழும்பு கால்பந்து கழகத்திற்கு இறுதி வாரத்தில் இடம்பெற இருக்கும் ரினௌன் கழகத்துடனான போட்டியின் வெற்றி தேவையாக இருந்து அது கிடைக்காமல் போனாலும் (அப்படி நடக்காது என நம்பப்படுகின்றது) அவ்வணி, கடற்படை உடனான போட்டியிலும், ப்ளூ ஸ்டார் கழகத்துடனான போட்டியிலும் வெற்றி பெறுதல் அவசியம்.
ப்ளூ ஸ்டார் அணியுடனான போட்டி, கொழும்பு கால்பந்து கழகத்திற்கு கடினமாக அமையும், ஏனெனில் சம்பியன் பட்டத்தினை சுவீகரிக்க கூடிய அணிகளில் அவர்களும் ஒன்றாக இருக்கின்றனர். இதனால், இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சித்து கொழும்பு கழகம் போராட வேண்டி இருக்கும்.
ஆனால், களுத்துறை இளம் அணியிடமிருந்து பெற்றுக்கொண்ட தோல்வியின் மூலம் கொழும்பு கழகமானது வரும் போட்டிகளில் எதிரணியினை பொறுமையாகவும், ஆழ்ந்த நுணுக்கங்கள் உடனும் நீண்ட நேரத்திற்கு கையாளக்கூடிய விதமாக செயற்பட வேண்டும் என்பதனை கற்றிருக்க வேண்டும்.
இத்தொடரின் சம்பியன் பட்டத்தினை வெளி அணியான ப்ளூ ஸ்டார் கழகம் கைப்பற்றுமா? அல்லது சம்பியன் நாமத்திற்காக தாகித்திருக்கும் ரினௌன் கழகம் கைப்பற்றுமா? அல்லது மீண்டுமொரு முறை கொழும்பு கால்பந்து கழகமே சம்பியன் ஆகுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்தொடர் பற்றிய அனைத்து விபரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.