9ஆவது ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை 8 ஓட்டங்களால் தோற்கடித்து ஐ.பி.எல் சம்பியனானது.
இந்தத் தோல்விக்குப் பின் கருத்து தெரிவித்த பெங்களூர் அணியின் தலைவர் விராத் கொஹ்லி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வலுவான பந்துவீச்சுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிண்ணத்தை முதல் தடவையாக வென்றது குறித்து ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் கூறியதாவது “வீரர்களின் கூட்டு முயற்சியால் ஐ.பி.எல். கிண்ணத்தை வென்று சாதனைபடைத்து இருக்கிறோம். இந்த அணிக்குத் தலைவராக செயற்பட்ட எனக்கு வீரர்கள் அமோக ஆதரவை அளித்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் குவிப்போம் என்று நாங்கள் நினைத்தோம். அதன்படி நடந்தது. விராத் கொஹ்லி மிகச்சிறந்த தலைவர். இந்த ஐ.பி.எல் பருவகாலம் அவருக்கு சாதனையாக அமைந்தது.
தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வென்று ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டது. ஒட்டு மொத்தத்தில் எங்களது துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு சிறப்பாக இருந்தது. அதுவே வெற்றிக்கு முக்கிய காரணியாகும்” என்று கூறியுள்ளார்.
தோல்வி குறித்து பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராத் கொஹ்லி கூறியதாவது,
“நாங்கள் மிகவும் போராடித்தான் தோற்றோம். 200 ஓட்டங்கள் வரை குவித்துவிட்டோம். 8 ஓட்டங்களால்தான் தோல்வி அடைந்தோம். நானும், டிவில்லியர்சும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நானும், டிவில்லியர்சும் களத்தில் நீடித்திருந்தால் வெற்றி பெற்று இருப்போம்.
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வலுவான பந்துவீச்சுதான் காரணம். அந்த அணிக்கு எங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஹைதராபாத் அணி வெற்றிக்குத் தகுதியான அணிதான். இந்தப் பருவகாலத்தில் நாங்கள் நன்றாகவே ஆடினோம். ரசிகர்கள் ஆதரவு சிறப்பாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்