இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும், சன்குவிக் லங்கா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சன்குவிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான திறந்த போட்டிப் பிரிவில் நடப்புச் சம்பியனான விமானப் படையை வீழ்த்தி இலங்கை இராணுவ அணி முதற்தடவையாக சம்பியனாகத் தெரிவாகியது.
Photos: 2018 Sunquick National Beach Volleyball Championship | Finals
Photos Of 2018 Sunquick National Beach Volleyball Championship | Finals Title 2018 …
இதேநேரம், பெண்களுக்கான திறந்த பிரிவில் இலங்கை இராணுவ அணியை வீழ்த்திய இலங்கை கடற்படை அணி சம்பியனாகத் தெரவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சன்குவிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை கடற்கரை கரப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்றது.
இவ்வருடத்துக்கான தேசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளுக்கு நாடளாவிய ரீதியில் இருந்து 112 அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் ஆண், பெண் இருபாலாருக்குமான 21 வயதுக்குட்பட்ட மற்றும் திறந்த வயதுப் பிரிவுகளில் நடைபெற்றதுடன், இதன் ஆரம்ப சுற்று ஆட்டங்கள் நீர்கொழும்பு பார்க் கடற்கரையில் நடைபெற்றன.
இதேநேரம், இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுகின்ற அணிகள் 2-1 என்ற செட் கணக்கை பூர்த்தி செய்தபிறகு ‘கோல்டன் செட்‘ என்ற புதிய செட்டொன்றை அறிமுகப்படுத்தவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்படி, ஆண்களுக்கான திறந்த பிரிவில் இலங்கை விமானப்படையின் புபுது ஏகநாயக்க, சுஜீவ சின்தக ஜோடியை 15-21, 21-16, 15-13 என்ற செட்கள் கணக்கில் இலங்கை இராணுவத்தின் இந்திக டிரோன், ஜயான் சனூஜ ஜோடி தோல்வியை அடையச் செய்தனர்.
பெண்களுக்கான திறந்த பிரிவில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த சாகரிகா குணசிங்க, கசுனி தாருகா ஜோடியினர் சம்பியனாகினர்.
இவர்கள் இருவரும் இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சத்துரிகா மதுஷானி, தமரா குமாரி ஜோடியினரை 2-0 என்ற செட்கள் (21-14, 21-06) அடிப்படையில் வெற்றிகொண்டு சம்பியனாகத் தெரிவாகினர்.
இந்நிலையில், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படை மற்றும் சீதுவ தவிசமர அணிகள் போட்டியிட்டு இருந்தன. இதில் 3-1 என்ற செட்கள் (12-21, 21-19, 10-15 மற்றும் 15-17) அடிப்படையில் விமானப்படை அணி சம்பியனாகத் தெரிவாகியது. இதில் இலங்கை விமானப்படை சார்பாக அஷேன் ரஷ்மிக – கவிந்து மலிந்த ஜோடியும், சீதுவ தவிசமர அணி சார்பாக மிஹிரங்க உதயகுமார் – ரெஹான் மதுஷங்க ஜோடியும் போட்டியிட்டிருந்தனர்.
இதேவேளை, 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டி முன்னதாகவே நிறைவுக்கு வந்தன. இதில் இலங்கை விமானப்படை அணி மற்றும் கலிகமுவ விளையாட்டுக் கழகம் ஆகியன போட்டியிட்டு இருந்தன. இதில் 2-1 என்ற (17-21, 21-17, 15-9) செட் கணக்கில் வெற்றி பெற்ற விமானப்படை அணி சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…