அண்மைக்காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்நாட்டின் கீர்த்திமிக்க மெய்வல்லுனர் பயிற்சியாளர்களில் ஒருவரான சுனில் குணவர்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சுனில் குணவர்தனவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
ஒரேயொரு பதக்கத்துடன் நாடு திரும்பிய இலங்கைக்கு என்ன நடந்தது?
கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற……….
எனவே, இதற்கான அனுமதி கிடைத்தவுடன் தேசிய மெய்வல்லுனர் குழுவை அவரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வீழ்ச்சிக்கு நிரந்தர பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படாமை மிக முக்கிய காரணியாக இருந்து வந்தது. இதற்காக ஒருசில வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அந்த முயற்சி எதிர்பார்த்தளவு வெற்றியைக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் குறித்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த வருடம் இதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டன. அந்த அடிப்படையில் சுனில் குணவர்தனவை தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான சுனில் குணவர்தன, இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் பல முன்னணி வீரர்களை உருவாக்கிய அனுபவமிக்க பயிற்சியாளர் ஆவார். அத்துடன், தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராகக் கடமையாற்றி இலங்கைக்காக அதிக சர்வதேசப் பதக்கங்களை பெற்றுக்கொடுத்த கௌரவமும் இவரை சாரும்.
இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீரர்களான தமயந்தி தர்ஷா, மஹேஷ் பெரேரா, நயன்தி குமாரி, ரொஹான் பிரதீப் குமார, ரோஹித புஷ்பகுமார மற்றும் பிரசன்ன அமரசேகர ஆகியோர் இவரது பயிற்றுவிப்பின் கீழ் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட வீரர்களாவர்.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 75
பிளாஸ்டிக் மீள்சுழற்சியினால்; தயாரிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்……….
அத்துடன், அண்மைக்காலமாக கனிஷ்ட மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஷெலின்டா ஜென்சன் மற்றும் சதீபா ஹெண்டர்சன் ஆகிய வீராங்கனைகளும் சுனில் குணவர்தனவின் கீழ் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, இவரது பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை மெய்வல்லுனர்கள், ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 9 தங்கப் பதக்கங்களையும், தெற்காசிய விளையாட்டு விழாவில் 25 தங்கப் பதக்கங்களையும், ஆசிய கிரான்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 28 தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், ஆசிய விளையாட்டு விழாவில் 3 தங்கப் பதக்கங்களையும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் இவரது பயிற்றுவிப்பின் கீழ் இந்நாட்டு மெய்வல்லுனர்கள் சுவீகரித்துள்ளனர்.
இதுதவிர, உலகளாவிய ரீதியில் நடைபெற்ற திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்குபற்றிய சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வீரர்கள் 10 இற்கும் அதிகமான வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அதேபோல, ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடர்களுக்காக தனிப்பட்ட முறையில் ஒரு பயிற்சியாளராக அதிக வீரர்களை பங்குபெறச் செய்த பெருமையும் இவரை சாரும்.
இலங்கை மெய்வல்லுனர்களுக்கு இராணுவத்தால் பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் ஹரீன்
நேபாளத்தில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள …..
இதன்படி, இவருடைய பயிற்றுவிப்பின் கீழ் ஒன்பது வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும், பத்து வீரர்கள் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
அதுமாத்திரமின்றி, இதுவரை தேசிய மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 36 தேசிய சாதனைகள் இவரிடம் பயிற்சி பெற்ற வீரர்களினால் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
1972ஆம் ஆண்டு ஜேர்மனியின் மியுனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் குணவர்தன, 1974ஆம் ஆண்டு ஈரானின் டெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விசேட அழைப்பின் பேரில் கடந்த சில வருடங்களாக மெய்வல்லுனர் அணியின் சிறப்பு பயிற்சியாளராக கடமையாற்றி வந்த கியூபா நாட்டைச் சேர்ந்த சேர்ஜியோ மானுஎல் ரொட்ரிக்ஸ் ருய்ஸ், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இலங்கை மெய்வல்லுனர் அணியின் சுவட்டு நிகழ்ச்சிகளின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<