சுவிட்சர்லாந்தில் சுமேதவுக்கு வெண்கலப் பதக்கம்

225

சுவிட்சர்லாந்தின் பெயனில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் சுமேத ரணசிங்க வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் நடைபெற்ற Citius Meeting Bern 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய 31 வயதான சுமேத ரணசிங்க, 74.55 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முன்னதாக கடந்த 11ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற அத்லெட்டிக் ஏஜ்னீவ் 2022 போட்டியில் பங்குகொண்ட அவர், 70.21 மீட்டர் தூரம் எறிந்து 4ஆவது இடத்தைப் பிடித்தார்.

எவ்வாறாயினும், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை சாதனைக்கு (83.04 மீற்றர்) சொந்தக்காரராகிய சுமேத ரணசிங்க, கடந்த ஏப்ரல் மாதம் தியகமவில் நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 82.16 மீட்டர் தூரத்தை எறிந்து தனது இரண்டாவது சிறந்த தூரத்தைப் பதிவு செய்தார்.

ஆனால், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு அவர் பரிந்துரைக்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் 85.00 மீட்டர் தூரத்துக்கு தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

இதனிடையே, சுமேதவைத் தவிர மேலும் மூன்று வீரர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி Citius Meeting Bern 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியிருந்தாலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பங்குகொண்ட காலிங்க குமாரகேவுக்கு ஆறாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. போட்டித் தூரத்தை அவர் 46.36 செக்கன்களில் ஓடிமுடித்தார்.

அதேபோல, பெண்களுக்கான 800 மீட்டரில் கயன்திகா அபேரட்ன ஆறாவது இடத்தைப் பிடித்தார். போட்டியை நிறைவுசெய்ய 2 நிமிடமும் 04.48 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற அத்லெட்டிக் ஏஜ்னீவ் 2022 போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற சாரங்கி சில்வாவுக்கு சுவிட்சர்லாந்தின் பெயனில் நேற்று நடைபெற்ற Citius Meeting Bern 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் நான்காவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. குறித்த போட்டியில் அவர் 6.19 மீற்றர் தூரம் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்படி, சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது இலங்கை வீரர்களால் இரண்டு பதக்கங்களை மாத்திரம் வெற்றி கொள்ள முடிந்தது. எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இரண்டு மெய்வல்லுனர் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய சாரங்கி சில்வா மற்றும் சுமேத ரணசிங்க ஆகிய இருவருக்கும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<