சுகததாஸ செயற்கை ஓடுபாதை மறுசீரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்

212
Sugathadasa synthetic track work started

குத்தகை (டெண்டர்) ஏலத்தில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக மறுசீரமைப்பு செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சுகததாஸ விளையாட்டரங்கில் உள்ள செயற்கை ஓடுபாதையின் மறுசீரமைப்புப் பணிகள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கான அடிக்கல் நடல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வீரர்கள், விளையாட்டுத்துறை அதிகாரிகளின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி

முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி..

2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்காக இச் செயற்கை சுவட்டு ஓடுபாதை அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரினால் அவசர அவசரமாக எந்தவொரு நிறுவனத்திடமும் பகிரங்கமான முறையில் குத்தகை கோரப்படாமல் தயாரிக்கப்பட்டது. எனினும் அது தரமற்ற முறையில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதால் குறித்த செயற்கை ஓடுபாதை 2013 முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த வருடம் முதல் இதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் ஏலதாரரின் முறைப்பாட்டினால் இரு தடவைகள் முடக்கி வைக்கப்பட்டன. ஆனால் அண்மைக்காலமாக இலங்கை மெய்வல்லனர் விளையாட்டின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக விளங்கிய சுகததாஸ மைதான செயற்கை ஓடுபாதையின் மறுசீரமைப்புப் பணிகள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் வாக்குறுதிக்கு அமைய மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்படி, குறித்த குத்தகையை உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தற்போதைய பிரதான அனுசரணையாளராகச் செயற்பட்டு வருகின்ற, உலகில் பல்வேறு பகுதிகளில் 24 முதற்தர செயற்கை ஓடுபாதைகளை அமைத்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எக்செஸ்கொனிகா (ஜே.வி) கூட்டு நிறுனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டது. அம்மைதானத்தின் மறுசீரமைப்பு பணிகளை 244 மில்லியன் ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதல் முறை இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வின்போது
முதல் முறை இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வின்போது

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சுகததாஸ விளையாட்டரங்கில் உள்ள செயற்கை ஓடுபாதையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக இரண்டு தடவைகள் குத்தகை பெறவேண்டி ஏற்பட்டதால் வீரர்கள் அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியருந்தனர். எனவே, பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து இதனை வெற்றிகொண்டு சுகததாஸ விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதையை விரைவில் மறுசீரமைத்து டிசம்பர் மாதமளவில் மெய்வல்லுனர் வீரர்களின் பாவனைக்கு அது மீண்டும் கையளிக்கப்படும்.

கடந்த சில வருடங்களாக இம்மைதானம் மூடப்பட்டதால் மெய்வல்லுனர் வீரர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தனர். எனினும், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து உலக தரத்துடன் தயாரிக்கப்பட்ட சுகததாஸ மைதான செயற்கை சுவட்டு மைதானத்தில் வீரர்கள் அனைவரும் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எமது வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வெல்வதற்கு இது உதவியாக இருக்கும்.

1997ஆம் ஆண்டுதான் முதற்தடவையாக இலங்கையில் செயற்கை ஓடுபாதையொன்று அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீண்டும் 2002இலும், 2011இலும் அங்கு புதிய செயற்கை ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இறுதியில் அமைக்கப்பட்ட ஓடுபாதைதான் மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது.

கிரீன்லீப் என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி தயாரிக்கப்பட்ட செயற்கை ஓடுபாதை எவ்வாறு 3 மாதங்களுக்குள் பயன்படுத்த முடியாமல் போனது. தரமற்ற முறையில் ஓடுபாதையை அமைத்த குறித்த நிறுவனத்திற்கு எதிராக நாம் நிச்சயம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என்றார்.

சுமார் 5,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய இலங்கையில் உள்ள ஒரேயொரு மெய்வல்லுனர் மைதானம் இதுவாகும். ஆனாலும் கடந்த 25 வருடங்களாக எந்தவொரு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சுகததாஸ மைதானம் தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது. எனவே, எதிர்வரும் காலங்களில் சிறந்த மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்கி நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை அடிக்கல் நடும் நிகழ்வின்போது
இம்முறை அடிக்கல் நடும் நிகழ்வின்போது

இதேவேளை இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் மெய்வல்லுனர் வீரரும், பயிற்றுவிப்பாளருமான சுனில் குணவர்தன கருத்து வெளியிடுகையில், விளையாட்டுத்துறை அமைச்சரிடம் 2 விடயங்களை சொல்ல விரும்புகிறேன். தற்போது இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இந்த சுகததாஸ மைதானத்தைச் சொல்லலாம். ஆனால் ஏன் எமது வீரர்களிடம் புற்தரை மைதானங்களில் அல்லது குன்றும் குழியுமான மைதானங்களில் ஓடி சீனாவை வெற்றிகொள்ள முடியாது என்று கேட்கிறீர்கள். ஆனால் இளம் வீரர்கள் ஒருபோதும் பயப்பட வேண்டாம். எதையும் பாதி வரை செய்துவிட்டு கைவிட வேண்டாம். அதேபோல கடந்த முறை இருந்த ஓடுபாதையைப் போல இந்த ஓடுபாதையும் இருக்கக்கூடாது என நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கறேன்” என அவர் தெரிவித்தார்.

இவ்விசேட நிகழ்விற்கு தேசிய நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் எம்.எச்.எம் பௌசி, பிரதி சபாநாயகரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருமான திலங்க சுமதிபால, மேல் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.