சுகததாச விளையாட்டு அரங்கை புனரமைப்பு செய்து, அடுத்த வருடம் பெப்ரவரி மாத இறுதிக்குள் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக அரங்கு கையளிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உறுதியளித்துள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் தற்பொழுது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கு விஜயம் செய்த வேளையிலேயே இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
சுகததாச விளையாட்டரங்கம் பல விளையாட்டு போட்டிகளின் மையமாக இருந்த போதிலும், கடந்த சில வருடங்களாக அதன் மேம்பாட்டு பணிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டு வந்தன. இதன் காரணமாக தடகள ஓட்டப்பாதை மேற்பார்வையின்றி இருந்தமையினால், அது ஓட்டப்போட்டிகளை நடத்துவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்தது.
இவ்வாறிருந்த நிலையில், தற்பொழுது அரங்கில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த புனரமைப்பு பணிகள் யாவும் இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் முடிவுறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், ”இப்பணிகள் யாவும் நிறைவடைந்ததும் ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகளுக்காக மைதானம் திறந்து விடப்படும். கட்டுமான பணிகள் அனைத்தும், முன்பிருந்த அதே கட்டுமான அமைப்புக்கு நடைபெற்றாலும், நீர் வழிந்தொடுவற்கு புதிய வடிகலாமைப்பு திட்டமொன்று அமைக்கப்படும்” என்றார்.
கடந்த சில காலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த அரங்கின் தடகள ஓட்டப்பாதை குறித்து அமைச்சர் பேசுகையில், ”நாங்கள் இன்னும் தடகள ஓட்டப்பாதை புனரமைப்பு ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யவில்லை. எனினும் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. செப்பனிடும் பணிகள் டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பமாகும். எவ்வாறிருப்பினும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தரமான தடகள ஓட்டப்பாதையை வீரர்களுக்கு கையளிக்க எதிர்பார்த்துள்ளோம்” என்று கூறினார்.
இந்த அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர், இந்த அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் செயன்முறைப்படுத்துவதற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் புனரமைப்பு பணிகளை பார்வையிடும் புகைப்படங்கள்
Photos: Sports Minister Inspects Sugathadasa Stadium
வெளி மாவட்டம் மற்றும் மாகாணங்களிலிருந்து பயிற்சிகளுக்காக வரும் விளையாட்டு வீரர்களின் அடிப்படை வசதிகளுக்காக கட்டப்பட்டு, கவனிப்பாரற்று இருந்த விடுதியையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த விடுதியும் தற்பொழுது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
1960ஆம் ஆண்டுகளில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த V.A. சுகததாச அவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கு, பிற்காலத்தில் இலங்கை தடகள வீரர்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் மையமாக மாற்றம் பெற்றது.
அதற்கு மேலதிகமாக, மின் விளக்குகளின் அறிமுகத்தோடு சர்வதேச தரத்துக்கு உயர்ந்த சுகததாச விளையாட்டரங்கம், முக்கியமாக சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தும் அரங்கமாகவும் மாற்றம் பெற்றது. இறுதியாக தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 2006ஆம் ஆண்டு இங்கு நடைபெற்றன.
இவ்வரங்கம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், மீண்டும் பெருந்தொகையான விளையாட்டு வீர வீராங்கனைகளை ஈர்க்கும் அதேநேரம், சர்வதேச மட்டத்திலான போட்டிகளை முன்பைவிட அதிகமாக நடாத்துவற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.