விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக சுகத் திலகரட்ன நியமனம்

42

இலங்கையின் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக முன்னாள் ஒலிம்பிக் வீரரும், நட்சத்திர மெய்வல்லுனர் வீரருமான சுகத் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற பிரதி அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இலங்கையின் முன்னாள் மெய்வல்லுனர் வீரரான சுகத் திலகரட்ன இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் ஒலிம்பிக் விளையாட்டு விழாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியது இதுவே முதல் தடவையாகும்.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணத்தில் இலங்கையின் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக சுகத் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

1996 அட்லாண்டா மற்றும் 2000 சிட்னி ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சுகத் திலகரட்ன, பொதுநலவாய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையின் 21ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே கடந்த சில தினங்களுக்கு முன் பதவியேற்றார். பட்டயக் கணக்காளராகப் பணியாற்றிய அவர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளராகப் பணியாற்றியுள்ளார். தேசிய மக்கள் சக்தி பொருளாதார சபையின் உறுப்பினரான இவர், தேசிய அறிஞர்கள் அமைப்பின் கொழும்பு மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.

இதேவேளை, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட அருண பண்டார நேற்றுமுன்தினம்  (20) விளையாட்டுத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1994ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்து கொண்ட அருண பண்டார, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விசேட பயிற்சி நெறிகளை கற்று பல அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் பணிப்பாளர் பதவிகளை வகித்துள்ளார். அதேபோல, திட்டமிடல் சேவையில் சிறப்பு  தர அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

ஆனமடுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தனது அடிப்படைக் கல்வியைப் பெற்று களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டத்தையும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார, சமூகக் கற்கைகள் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள் மற்றும் அபிவிருத்திக் கற்கைகளில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

>> மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க <<