இலங்கையின் முதல் பாராளுமன்ற உறுப்பினராகும் முன்னாள் ஒலிம்பிக் வீரர்

44

ஒலிம்பிக் வீரரும், ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான சுகத் திலகரத்ன தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

இலங்கை விளையாட்டு வரலாற்றில் ஒலிம்பிக் விளையாட்டு விழாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் தடவையாகும் 

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகத்.திலகரத்ன, 1998ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஃபுகுவோகா ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 44.61 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். எவ்வாறாயினும், அவரால் நிகழ்த்தப்பட்ட குறித்த சாதனையானது இன்று வரை முறியடிக்கப்படவில்லை. 

1973ஆம் ஆண்டு ஜுலை 30ஆம் திகதி மத்திய மாகாணம், நோர்டன்பிரிட்ஜில் பிறந்த சுகத் திலகரத்ன, பின்னர் மெய்வல்லுனர் போட்டிகளில் நெடுந்தூர ஓட்ட வீரராக அறியப்பட்டு 400 மீற்றர் போட்டியின் மூலம் இலங்கையின் பெயரை உலக அரங்கிற்கு கொண்டு சென்றார் 

இலங்கைக்கு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்

சுகத் திலகரத்ன 1996 அட்லாண்டா மற்றும் 2000 சிட்னி ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்,இதில் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் சுற்றில் அப்போதைய 400 மீற்றர் உலக நடப்பு சம்பியனான மைக்கல் ஜொன்சனை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது 

அதேபோல, 1998இல் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றரில் தங்கப் பதக்கத்தையும், மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற அவர், ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

இதனிடையே, அவர் 2015 முதல் 2017 வரையான காலப்பகுதியில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். 

>> மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க <<