அண்மையில் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிவடைந்த 32ஆவது தேசிய மட்ட பாடசாலைகள் விளையாட்டு விழாவின், மெய்வல்லுனர் போட்டிகளில் பல சாதனைகள் இடம்பெற்றன.
அந்த வகையில், 15 வயதுக்குட்பட்ட குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டமெறிதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மட்டப் போட்டியில் இரட்டை தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது மாணவன் என்ற சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலய மாணவன் ஜெயரெட்ணம் ரிஷானன் குறித்த thepapare.com இன் ஒரு பார்வை இது.
குறித்த விளையாட்டு விழாவின் இரண்டாம் நாள் இடம்பெற்ற குண்டெறிதல் போட்டியில் பங்குபற்றிய ரிஷானன் 13.7௦ மீட்டர் தூரம் குண்டை எறிந்து தனது முதலாவது தங்க பதக்கத்தை பெற்றுக்கொண்டார். குறித்த போட்டி இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் பரிதிவட்டம் எறிதல் போட்டியில் பங்குபற்றிய அவர் 46.56 மீட்டர் தூரம் குண்டை எறிந்து இரண்டாவது தங்கப் பதக்ககத்தையும் வென்றார். இது, அவர் களுதாவளைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த ஒரு சந்தர்ப்பமாகவே இருந்தது.
களுதாவளை மகா வித்தியாலயம் பற்றிய அறிமுகம்
ஆரம்பம் முதல் இப்பிரதேசம் பலரால் வியந்து பார்க்கும் அளவுக்கு மிளிர்வதற்கு இப்பிரதேசத்தின் விவசாயம் மற்றும் விளையாட்டும் முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
1951ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட களுதாவளை மகா வித்தியாலயத்தில் பல கல்விமான்களும், புத்திஜீவிகளும் உருவாகியுள்ளனர். எனவே இந்தப் பாடசாலையும் அதிகமானவர்களால் கதைக்கப்படும் ஒரு முக்கிய கல்வி நிலையமாக உள்ளது.
ஆரம்பத்தில் இங்கிருந்து பலர் தேசிய ரீதியில் வெற்றிகளைப் பெற்றாலும், 1985ஆம் ஆண்டில் ஆரம்பமான பாடசாலைக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு விழாவில், 2001ஆம் ஆண்டிலேயே இக்கல்லூரிக்கு முதலாவது தேசிய வெற்றி கிடைத்தது.
அதன்போது அப்பாடசாலை மாணவன் மயூரதன், கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றெடுத்தார். இக்காலத்தில், பாடசாலைக்கு உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லாத நிலை இருந்தது.
இருந்தாலும் சிறிது காலம் விளையாட்டு போட்டிகளில் வீழ்ச்சி கண்டிருந்த களுதாவளை மகா வித்தியாலயம், விளையாட்டில் ஆர்வமான இப்பாடசாலையின் பழைய மாணவன் திரு சி.அலோசியஸ் தலைமையில் மீண்டும் 2013இல் எழுச்சியடையத் தொடங்கியது. இவரது காலத்திலேயே கிழக்கின் முதல்தர பாடசாலையாக இப்பாடசாலை உயர்ந்தது. தற்பொழுது ரிஷானன் பெற்றுக் கொடுத்த இந்த இரட்டை தங்கப்பதக்கம் சி.அலோசியஸின் ஓய்வுக்கு பரிசாகக் கிடைத்தது எனலாம்.
களுதாவளை பாடசாலை முகம்கொடுத்த சவால்கள்
களுதாவளை பாடசாலை அதிகளவான விளையாட்டு திறமைகள் மற்றும் விளையாட்டில் புகழ் என்பவற்றைப் பெற்றிருந்த போதிலும், 2௦13ஆம் ஆண்டுக்கு முற்பகுதியில் இக்கலூரிக்கு உடற்கல்வி ஆசிரியர் ஒருவர்கூட இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்தது.
இதன் காரணமாக விளையாட்டுத் துறையில் வீழ்ச்சி கண்டிருந்த நேரத்திலேயே, இப்பாடசாலைக்கு ஜெயரெட்ணம் ரிஷானனின் தந்தையான சோ.ஜெயரெட்ணம் உடற்கல்வி ஆசிரியராக பொறுப்பெடுத்து வந்தார்.
அந்த நேரத்தில் பாடசாலை விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், முன்னாள் அதிபர் திரு.சி.அலோசியஸ் தலைமையில், சோ.ஜெயரெட்ணம், பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழக தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் பாடுபட்டனர்.
இது குறித்து thepapare.com இடம் கருத்து தெரிவித்த கெனடி விளையாட்டுக் கழகத் தலைவர் த.கோகுலகுமாரன் ”எங்களுடைய பாடசாலைக்கு ஒழுங்கான மைதானம், தேவையான வளங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இல்லை. அதையும் தாண்டி நாங்கள் சாதித்திருக்கிறோம். மேலும், எங்களுக்கு தேவையான வளங்கள் இருக்கும் பட்சத்தில் சர்வதேச தரம் வரை சென்று சாதிக்கும் வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்” என்றார்.
இவ்வாண்டின் வெற்றிகளும் சாதனையும்
இவர்களது இந்த முயற்சிகளின் பலனாக, 2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையேயான மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி நிகழ்வில் 211 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் மீண்டும் முதலாம் இடத்தை தக்கவைத்துள்ளது. இந்த சாதனைக்கு களுதாவளை மகா வித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளான 95 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்து மிகப் பெரிய பங்களிப்பு வழங்கியது.
இந்த நிகழ்வின்போது, 15 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டி நிகழ்ச்சியில் ரிசானன் 12.97 மீட்டர் தூரம் குண்டை எறிந்து முதலாம் இடத்தைப் பெற்றதுடன் கிழக்கு மாகாண மட்ட புதிய சாதனையையும் நிலைநாட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்தார். இதற்கு முன்னர் இந்த சாதனை 12.82 மீட்டராக இருந்தது. மேலும், இதன்போது ரிசானனுக்கு 15 வயதின் கீழ் பிரிவின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது.
மேலும் இவர் பரிதிவட்டம் எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று 3 பதக்கங்களை தன்வசப்படுத்தினார்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையின் வளர்ச்சிப் போக்கை காண்பித்த இவ்வருட தேசிய விளையாட்டு விழா
அதேபோல், அப்பாடசாலையின் மற்றொரு மாணவனான வேணுஜன், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.20 மீட்டர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றதுடன் 21 வயதின் கீழ் பிரிவில் முன்பிருந்த மாகாண மட்ட சாதனையை முறியடித்தார். மேலும், 17 வயதின் கீழ் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் சந்திரகுமார் 2.70 மீட்டர் உயரம் பாய்ந்து கிழக்கு மாகாண மட்ட புதிய சாதனை படைத்தார்.
அதேபோன்று, 19 வயதின் கீழ் பிரிவில் செல்வன் நுஜாந்தன் வெற்றி பெற்றார். கோலூன்றி பாய்தல் போட்டிகளில் ஆண்கள் பிரிவு அதிகமான தங்கப் பதக்கங்களும் இப்பாடசாலை வீரர்கள் வசமாகியது.
மேலும், 19 வயதின் கீழ் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இப்பாடசாலை வீரர்கள் போட்டித் தூரத்தை 3.43.9 செக்கன்களில் ஓடி முடித்து கிழக்கு மாகாணத்திற்கான புதிய சாதனை படைத்தனர்.
அதேபோன்று, பெண்கள் பிரிவில் தி.சோஹாசினி 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கங்களையும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதோடு, இரண்டு அஞ்சலோட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றி கொண்டு மொத்தமாக 5 பதக்கங்களை தன்வசப்படுத்தினார்.
அப்பாடசாலையின் மற்றொரு வீரரான தி.லிகிதரன் 110 மீட்டர் தடைதாண்டி ஓடலில் தங்கப் பதக்கத்தையும், 400 மீட்டர் தடைதாண்டலில் வெங்கலப் பதக்கத்தையும் வென்றார். பெண்கள் பிரிவில் றூஜி 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.
இப்பாடசாலை மொத்தமாக 10 முதலிடங்கள், 8 இரண்டாம் இடங்கள் மற்றும் 10 மூன்றாம் இடங்களைப் பெற்றது. இதில் ஏழு அஞ்சல் ஓட்டக் குழுக்கள் அடங்குவதால் பதக்க அடிப்படையில் 13 தங்கப் பதக்கங்களும், 17 வெள்ளிப் பதக்கங்களும் 19 வெங்கலப் பதக்கங்களும் பெற்று, மொத்தமாக 49 பதக்கங்களை களுதாவளை மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண விளையாட்டில் சரித்திரம் படைத்தது.
ஜெயரெட்ணம் ரிஷானனின் சாதனைப் பயணம்
கடந்த மூன்று வருடங்களாக பயிற்சி பெற்று வரும் ஜெயரெட்ணம் ரிஷானன் சிறு வயதில் உடற் பருமனாக இருந்த போதிலும், வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்தார்.
எனினும், அவரை பரிதிவட்டம் எறிதல் மற்றும் குண்டெறிதல் போட்டிகளில் வெற்றியடையச் செய்யும் நோக்கில் அவரது தந்தையும் உடற்கல்வி ஆசிரியருமான ஜெயரெட்ணம் தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கி வந்தார்.
தொடர்ந்து 3 வருடங்கள் கடுமையான பயிற்சிகளைப் பெற்றதன் பின்னர் கடந்த மே மாதம் நடைபெற்ற தேசிய இளையோர் விளையாட்டு விழாவில், 16 வயதுக்குட்பட்ட பரிதிவட்டம் எறிதல் போட்டியில் பங்குபற்றி தனது முதல் வெற்றியாக இரண்டாம் இடத்தை பெற்றார்.
அந்த வெற்றியினால் கிடைத்த ஊக்கம் காரணமாக தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை அவர் அன்று பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசிய போட்டிகளில் கலந்து கொண்ட ரிஷானன் தனது விடா முயற்சி காரணமாக இன்று இரட்டைத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ரிஷானனுக்கான பயிற்சிகளை ஆரம்பித்தது முதலே, தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட சாதனை தரவுகளை கூறி, அதற்கு ஏற்றவாறு அவரை தயார்படுத்தும் விஷேட முயற்சியில் ஜெயரெட்ணம் ஈடுபட்டமை இந்த சாதனைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று எம்மால் கூறலாம்.
விளையாட்டில் மாத்திரமன்றி கல்வியிலும் சிறந்து விளங்கும் ஒருவராகவே ரிஷானன் உள்ளார். தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளை பெற்றமை மற்றும் அண்மையில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றமை என்பன அவரது கல்வித்துறைத் திறமைக்கு சான்றுகளாக உள்ளன.
தனது இந்த வெற்றிகள் குறித்து ரிஷானன் thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில் ”எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி இதேபோல் தங்கம் வென்று தாய் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது முக்கிய குறிக்கோளாக உள்ளது” என்றார்.
படிப்பிலும் சிறந்து விளங்கும் இவர், தான் எதிர்காலத்தில் ஒரு வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதை லட்சியமாக கொண்டிருப்பதாக தெரிவித்தார். அத்துடன் தனது திறமைகளை வெளிப்படுத்த உதவிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதற்கும் அவர் மறக்கவில்லை.
சிறு பராயத்தில் இருந்து பெறும் பயிற்சிகளின் இறுதி விளைவு எதிர்காலத்தில் பாரிய சாதனைகளை நிலைநாட்டுவதாகவே பல வரலாற்றுப் பதிவுகள் எமக்குக் காண்பிக்கின்றன. அந்த வகையில், தற்பொழுது வெறும் 15 வயதேயான ஜெயரெட்ணம் ரிஷானன் மேலும் பல வெற்றிகளைக் குவித்து, சாதனைகள் படைத்து கிழக்கிலங்கைக்கு மாத்திரமன்றி, நாட்டுக்கும் பெருமைகள் பல தேடித்தர வேண்டும் என்று thepapare.com சார்பாக நாமும் வாழ்த்துகின்றோம்.