மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்திலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும் T20 உலகக்கிண்ணத்துக்கான இங்கிலாந்து குழாத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டாம் என பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
2019 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி பற்றிய தவறு குறித்து முன்னாள் நடுவர்
பென் ஸ்டோக்ஸின் முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்ததன் காரணமாக அவர் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடவில்லை. இறுதியாக நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் பின்னர் 2 ஐ.பி.எல். போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார்.
இறுதியாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் விளையாடியிருந்த போதும், முழங்கால் உபாதை காரணமாக 5வது டெஸ்ட் போட்டியில் மாத்திரம் 5 ஓவர்களை வீசினார்.
இந்த நிலையில் தான் உபாதையிலிருந்து குணமடைந்து முழுமையான சகலதுறை வீரராக மாறுவதற்காக T20 உலகக்கிண்ணத்தை தியாகம் செய்வதாக பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து வகை போட்டிகளிலும் சகலதுறை வீரராக விளையாடுவதற்காக என்னுடைய பந்துவீச்சு உடற்தகுதியை அதிகப்படுத்த கடுமையாக உழைத்து வருகின்றேன். T20 உலகக்கிண்ணத்திலிருந்து விலகுவது எதிர்காலத்தில் பலமான சகலதுறை வீரராக மீண்டுவருவதற்கான ஒரு தியாகமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<