இங்கிலாந்து அணிக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கான அயர்லாந்து குழாத்தில் போல் ஸ்டேர்லிங் இடம்பெற்றுள்ளார்.
போல் ஸ்டேர்லிங் தன்னுடைய உடற்தகுதியை பேணும் முகமாக இந்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
>> கில், ஷஹாவின் அதிரடி ஆட்டங்களுடன் குஜராத்துக்கு இலகு வெற்றி
எனினும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டெஸ்ட் போட்டியாக மாற்றப்பட்ட பின்னர், இலங்கை தொடரில் விளையாடியிருந்தார். இதில் தன்னுடைய கன்னி டெஸ்ட் சதத்தையும் பதிவுசெய்திருந்தார்.
இவ்வாறான நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக போல் ஸ்டேர்லிங் அறிவித்ததை தொடர்ந்து, அவர் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், IPL தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஷ் லிட்டிலிற்கு இங்கிலாந்து தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை தொடருக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த கிரைக் யங் மற்றும் கோனர் ஒல்பர்ட் ஆகியோர் அடுத்த தொடருக்கான குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், முரே கொம்மின்ஸ், மெதிவ் ஹெம்பிரைஷ் மற்றும் பென் வைட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் அயர்லாந்து அணியின் தலைவராக என்ரூவ் பெல்பேர்னீ செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து குழாம்
என்ரூவ் பெல்பேர்னீ (தலைவர்), மார்க் அடைர், கேர்டிஸ் கேம்பர், ஜோர்ஜ் டொக்ரல், பியோன் ஹேண்ட், கிரேம் யூம், டொம் மேயஸ், அன்ரூவ் மெக்பிரைன், ஜேம்ஷ் மெக்கலம், பீட்டர் மூர், கோனர் ஒல்பர்ட், போல் ஸ்டேஸர்லிங், ஹெரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரைக் யங்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<