ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஸ்மித்

National Super League 4 Day Tournament 2025

9

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக துபாயில் நேற்று நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய ஸ்மித் 73 ஓட்டங்களைக் குவித்தார் 

இந்த நிலையில், ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக ஸ்மித் போட்டிக்குப் பிறகு சக வீரர்களிடம் கூறியிருக்கிறார். 

இதனிடையே, ஸ்டீவ் ஸ்மித்தின் ஓய்வை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதியில் இந்திய அணி உடனான போட்டிக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் T20i போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ஸ்மித் கூறுகையில், ‘இது சிறந்த பயணமாக இருந்தது. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். பல அற்புதமான நேரங்களும் மகிழ்ச்சியான நினைவுகளும் உள்ளன. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆவலுடன் இருக்கின்றேன்எனத் தெரிவித்துள்ளார் 

35 வயதான ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணிக்காக 2010 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரராக அறிமுகமானர்.; இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 12 சதங்கள் மற்றும் 35 அரைச் சதங்களுடன் 5,800 ஓட்டங்களைக் குவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு 164 ஓட்டங்கள் குவித்தது இவரது அதிகபட்சமாகும். லெக்ஸ்பின் சுழல்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 பிடியெடுப்புகளையும் எடுத்துள்ளார். இதுவரை 64 ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவை வழிநடத்தியுள்ள ஸ்மித், அதில் 32 போட்டிகளில் அந்த அணியை வெற்றி பெற வைத்துள்ளார் 

2015, 2023 ஒருநாள் உலகக் கிண்ணங்களை வென்ற அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித் அங்கம் வகித்திருந்தார் இதில் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணததில் அதிக ஓட்டங்களைக் குவித்த அவுஸ்திரேலிய வீரராக அவர் இடம்பிடித்தார் 

அதேபோல, 2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த அவுஸ்திரேலிய வீரருக்கான விருதை வென்ற ஸ்மித், 2015 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியிலும் இடம்பெற்றிருந்தார். 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<