வாழ்நாள் தடைக்கு முகம்கொடுக்கும் நெருக்கடியில் ஸ்மித், வோர்னர்

1755
Image Courtesy - AFP

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ICC) ஒரு போட்டித் தடையோடு தப்பிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் அந்த அணியின் உப தலைவர் டேவிட் வோர்னர் வாழ்நாள் தடைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்ட ஆஸி. அணி

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்..

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று தலைவர் இயன் ரோய் தென்னாபிரிக்காவில் இருக்கும் வீரர்களிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளார். இந்த மோசடிக் குற்றச்சாட்டு குறித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முழு விசாரணையின் ஓர் அங்கமாகவே இந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.  

இந்த விசாரணைகளை தொடர்ந்து ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் விளையாட்டு உணர்வுக்கு எதிராக நடந்து கொண்டதற்கு ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னருக்கு சுயாதீன ஆணையாளர் ஒருவரால் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வழி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒழுக்காற்று விதியின் கீழ் உச்சபட்ச தண்டனையாக வாழ்நாள் தடை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கெமரூன் பான்க்ரொப்ட் பந்தை சேதப்படுத்துவது தொலைக்காட்சியில் தெளிவாக தெரிந்ததை அடுத்தே அந்த செயலில் ஈடுபட்டதை ஸ்மித் ஒப்புக்கொண்டார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 107 ஓட்டங்களுக்கே சுருண்ட அவுஸ்திரேலிய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) முடிவடைந்த போட்டியில் 322 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-2 என பின்தங்கியுள்ளது.   

இந்த சர்ச்சையை அடுத்து ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மற்றும் உபதலைவர் பதவியில் இருந்து விலகியதோடு விதிமுறையை மீறிய ஸ்மித்துக்கு ICC ஒரு போட்டித் தடை மற்றும் குறித்த போட்டின் ஊதியத்தை அபராதமாகவும் விதித்தது.

தனுஷ்க குணதிலக்கவின் சதத்தால் உள்ளூர் ஒருநாள் சம்பியனான SSC

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான…

அதேபோன்று பந்தை சேதப்படுத்துவதில் ஈடுபட்ட பான்க்ரொப்டுக்கு போட்டிக் கட்டணத்தில் 75 வீத அபராதமும் 3 தகுதியிழப்பு புள்ளிகளையும் ICC வழங்கியுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபடுவதற்கு ‘தலைமை குழு’ முன்கூட்டி திட்டமிட்டதாக ஸ்மித் ஒப்புக்கொண்டிருந்தார். எனினும் போட்டியின் மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை பகல்போச நேரத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தலைமை குழுவைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்காத நிலையில் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் மீதே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று விதிகளின் கீழ் ஸ்மித் மற்றும் ஏனையவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைமை நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லாண்ட், அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்ட டிம் பெயினும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ‘இது ஒரு பயங்கரமான 24 மணி நேரமாக இருந்தது. எமது ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை எந்த உத்தியை தவறவிட்டது?

நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20..

இந்நிலையில் ஸ்மித், வோர்னர், பான்க்ரொப்ட் மற்றும் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டெரன் லீமனை சுற்றியே அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதன்மூலம் இந்த சர்ச்சையில் தொடர்புபட்ட வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று விதியின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்படும் குற்றச்சாட்டு சுயாதீன ஆணையாளர் ஒருவரால் விசாரிக்கப்படும். இதனைத் தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தண்டனைகள் வழங்கப்படவுள்ளது.