இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருமான ஸ்டீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவதில் தொடரும் சிக்கல்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் …
களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக சிறந்த அனுபவத்தைக் கொண்ட இவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக சென்றுள்ள இலங்கை அணியுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி இணைந்து கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஸ்டீவ் ரிக்ஸனின் வருகை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா, “இலங்கை தேசிய அணிக்கு ஸ்டீவ் ரிக்ஸனை அன்புடன் வரவேற்கிறோம். கிரிக்கெட்டில் அதி முக்கியமான விடயமாக விளங்கும் களத்தடுப்பில் அவருடையை அனுபவத்துடன், அணியை முன்னோக்கி கொண்டு செல்வார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஸ்டீவ் ரிக்ஸன் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக்கிண்ணம் வரை இலங்கை தேசிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கை தேசிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த மனோஜ் அபேவிக்ரம, கிரிக்கெட் சபையின் உயர் செயல்திறன் மையத்தில், அபிவிருத்தி குழாமிற்கான செயல் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ரிக்ஸன், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<