நியூசிலாந்து பயிற்றுவிப்பு குழாத்தில் இணையும் பிரபலங்கள்

ICC Men's Cricket World Cup 2023

308

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்புக் குழாத்தில் முக்கிய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட நடப்பு சம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளெமிங், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் பாஸ்டர் ஆகியோர் இணைந்துள்ளனர்.

கேரி ஸ்டீட் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த முடிவு எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியை மேலும் வலுப்படுத்தும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 30ஆம் திகதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட T20i மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியுடன் இந்தக் குழு இணைந்து செயல்பட உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இயன் பெல் ஆகிய இருவரும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு முன் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பயிற்றுவிப்புக் குழாத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

அதன்படி, ஆகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான T20i தொடரில் நியூசிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக இயென் பெல் பணியாற்றுவார். அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் லூக் ரோஞ்சி நியூசிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராகவும், இயென் பெல் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் பணியாற்றவுள்ளனர்.

இதனிடையே, நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டீட்டுக்கு குறித்த 2 தொடர்களிலும் ஓய்வளிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மீண்டும் அவர் அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் போஸ்டர், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரிலும், உலகக் கிண்ணத் தொடரிலும் நியூசிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

இந்த நிலையில், சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது நியூசிலாந்து அணியின் இரண்டாவது பயிற்சியாளராக இருப்பார்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குப் பிறகு பங்களாதேஷில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் போது சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<